அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து ஹில்லரி கிளிண்டன் அம்மையார் வெள்ளியன்றோடு விலகுகிறார்.
ஒரு மாணவர் தலைவராக தனது பொதுவாழ்க்கையை ஆரம்பித்த
ஹில்லரி, உலகம் அறிந்த ஒரு அரசியல் தலைவராக உயர்ந்து பல்வேறு
பொறுப்புகளில் பரிமளித்துள்ளார்.
1992ல் பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக ஆன நேரத்தில் அவருடைய மனைவியாக உலக அரங்கில் ஹில்லரி முன்னிலைக்கு வந்தார்.
கல்லுப் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்
கணிப்பில், உலகத்தில் அதிகம் பேர் மதிப்புக்கும் விருப்பத்துக்குமான பெண்
பிரமுகராக தொடர்ந்து பதினேழு வருடங்களாக இவர் முதலிடத்தில் வந்துள்ளார்.
அதிபரின் மனைவி என்ற ஸ்தானத்திலும், பின்னர்
நாட்டின் ராஜாங்க அமைச்சர் என்ற ஸ்தானத்திலும் ஏராளமான உலக நாடுகளுக்கு
ஹில்லரி சென்று திரும்பியுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஹில்லரி 112 நாடுகளுக்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தில் அவருக்கு இருக்கின்ற மக்கள் ஆதரவு பற்றிய கருத்து கணிப்பில் 70 சதவீத ஆதரவை ஹில்லரி பெற்றுள்ளார்.
அமெரிக்க சரித்திரத்தில் தலைசிறந்த ராஜாங்க அமைச்சர்களில் ஒருவராகத் ஹில்லரி திகழ்வதாக அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மார்ட் பவர் என்று சொல்லப்படுகின்ற
புத்திசாலித்தனமாக அதிகாரம் செலுத்தும் உத்தியை சர்வதேச அரங்கில் அமெரிக்கா
கையாள வேண்டும் என்று கொள்கைகளை வகுத்து செயல்படுத்தியவர் ஹில்லரி ஆவார்.
ராஜீய வழியில், பொருளாதார வழியில், ராணுவ வழியில்,
அரசியல், சட்டம் மற்றும் கலாச்சார வழியில் சரியான வழிகளைத்
தேர்ந்தெடுத்து, அவற்றை சரியான கலவையில் பயன்படுத்தி அமெரிக்கா சர்வதேச
அரங்கில் தனது செயல்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஹில்லரி
வாதிட்டிருந்தார்.
தற்போது ஹில்லரி பதவி விலகினாலும், இன்னும் நான்கு
ஆண்டுகளில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்ற கேள்வி
பலருக்கும் உள்ளது.
அண்மைய காலங்களில் அவர் உடல் நிலை
பாதிக்கப்பட்டிருந்தது என்றாலும், அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடமாட்டார்
என்று நிச்சயமாகக் கூறுவதற்கில்லை.
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு, அது சம்பந்தமான அறிவிப்பை அவர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனாலும் பரபரப்பு அரசியலில் ஈடுபட்ட காலெமெல்லாம் முடிந்துவிட்டது என்றே கிளிண்டனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக