மனிதஉரிமை விவகாரங்கள் உள்ளிட்ட சிறிலங்காவின் நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம், கொமன்வெல்த், மற்றும் அனைத்துலகப் பங்காளர்களுடன் தாம் தொடர்ந்து கலந்துரையாடப் போவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னால்
இருந்த பிரித்தானியா, வரும் மார்ச் மாத அமர்வுக்கு முன்னதாக, அனைத்துலக ஆதரவைக் கட்டியெழுப்புவதற்காக தீவிரமாக செயற்படவுள்ளது.
நாம் சிறிலங்கா தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியம். கொமன்வெல்த், மற்றும் அனைத்துலக பங்காளர்களுடன் பரந்தளவில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம்.
மனிதஉரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் அரசியல் தீர்வு தொடர்பாக, நாம் உண்மையான முன்னேற்றத்தையே எதிர்பார்க்கிறோம் என்று பிரதமர் டேவிட் கமரொன் சிறிலங்கா அதிபரிடம் தெளிவாக கூறியுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை வரும் மார்ச் மாதம் இந்த முன்னேற்றத்தை மதிப்பிடும்.
குறிப்பாக, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான, வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்துள்ளார்.
வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் இந்த விசாரணைகள் சரியான முறையில் தொடங்கப்படாவிட்டால், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் கொண்டுள்ள அனைத்துலக விசாணை என்ற நிலைப்பாட்டின் கீழ் நாமும் இணைந்து பணியாற்ற நேரிடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக