சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

31 டிசம்பர், 2012

1,000 முன்னாள் போராளிகள் உன்னிப்பான கண்காணிப்பில்; யாழ். கட்டளைத் தளபதி தகவல்



news
தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்கள் என்பதை மறைத்து புனர்வாழ்வு பெறாமல் நழுவிய ஆயிரம் முன்னாள் போராளிகளை படைப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
 
ஏனெனில் இவ்வாறானவர்களே வடக்கில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
 
இவ்வாறு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார் என்று "சிலோன் ருடே' என்ற ஆங் கில இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
தற்போது வடக்கில் இடம்பெற்றுவரும் கைதுகள் தொடர்பாக இந்த இணையத் தளம் வெளியிட்டுள்ள யாழ். மாவட்ட இராணுவத்தளபதியின் விளக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹத்துருசிங்க தெரிவித்த தாக குறித்த இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் வருமாறு:
இறுதிப் போரின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் படையினரிடம் சரணடைந்திருந்தார்கள். அவர்கள் புனர்வாழ்வு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
 
தொழில் பயிற்சியும், புனர்வாழ்வும் வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் சமூகத்தோடு ஒன்றிணைக்கப்பட்டனர். ஆனால் தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததைச் சிலர் மறைத்து புனர்வாழ்வு பெறுவதில் இருந்து நழுவி விட்டார்கள். படையினரின் கண்களில் இருந்து தப்பிய இவர்கள் பொதுமக்களோடு பொதுமக்களாக நலன்புரி நிலையங்களுக்குச் சென்று விட்டனர்.
 
இவ்வாறு நழுவியவர்களே வடக்கில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்துள்ளது. எனவே இவர்களின் நடவடிக்கைகளை படைப் புலனாய்வாளர்களும், பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரும் கண்காணித்து வருகின்றனர்.
 
இதன் அடிப்படையிலேயே குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 48 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
 
தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் இந்த முன்னாள் போராளிகள் விரைவில் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்படவுள்ளனர். இதேவேளை, வடக்கில் ஆயிரம் முன்னாள் போராளிகளை இன்னமும் படைப் புலனாய்வாளர்களும், பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். என்று ஹத்துருசிங்க தெரிவித்தார் என்று "சிலோன் ருடே' தகவல் வெளியிட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக