சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

31 டிசம்பர், 2012

சிறுபான்மை மக்களின் உரிமைகளை என்றும் விட்டுக் கொடுக்க மாட்டோம்; பேராளர் மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

news
சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரப்பகிர்வைக் கொண்டு வருவதற்காகத் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும், மாகாணசபை முறைமையை இல்லா தொழிக்கவோ அல்லது அதைப் பலவீனப்படுத்தவோ அல்லது அதன் அதிகாரங்களைக் குறைக்கவோ எடுக்கப்படும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவு வழங்குவதில்லை என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
 
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் இந்த மாநாடு தெஹிவளையில் இடம்பெற்றது. 
 
இந்த மாநாட்டில் எட்டுத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த எட்டுத் தீர்மானங்களும்,  அத்தீர்மானங்களுடன் இணைந்த மேலும் சில விடயங்களும் வெளியிடப்பட்டன.
 
இலங்கை நாடு அனைத்து சமூக மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய பிரிக்கப்படாத நாடாகும். திருப்திகரமான அதிகாரப்பகிர்வின் ஊடாகத்  தீர்மானம் மேற்கொள்வதிலும் அரச அதிகாரத்துக்குச் செல்வதற்கும் அவர்களுக்கு சம உரிமை உண்டு என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதிப்படுத்துகிறது. 
 
அதிகாரப்பகிர்வின் ஊடாக ஒவ்வொரு பிரஜைக்குமான சுயாட்சியை உறுதிப்படுத்தி மாகாணசபை முறைமை ஆக்கபூர்வமானதாக ஆக்கப்பட வேண்டும் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எப்போதுமுள்ள நிலைப்பாடாகும். 
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபைத் தேர்தல்கள் அனைத்திலும் போட்டியிட்டிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை எட்டும் நோக்கில் இலங்கை அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் பங்குபற்றியுள்ளது. 
 
தற்போது பரவலாக மேற்கொள்ளப்பட்டுவரும் சமயரீதியான சகிக்கமுடியாத நிகழ்வுகளையும், மாகாணசபை முறைமையைப் பலவீனப்படுத்துவதற்கும் அதை இல்லாமல் செய்வதற்கும் பல சக்திகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளையும்,  இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்தும் விடயத்தில் குறைந்தளவு கவனம் செலுத்துவதையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்காணித்துவருகிறது. இவற்றில் ஆழமாக அக்கறை செலுத்தியுள்ளது. 
 
ஆகவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னுரிமை விடயமாக கீழ்வரும் எட்டு விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்கிறது.  
 
1. சமயங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து மதங்களினதும், அந்த மதங்களின் வணக்கஸ்தலங்களினதும், வணக்க வழிபாடுகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை அரசுக்குத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும். 
 
2. அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குத் தேவையான அதிகாரப்பகிர்வை நோக்கிய எமது அர்ப்பணிப்பை நாம் மீண்டும் ஒரு தடவை இந்த எமது 24ஆவது மாநாட்டில் கூறிக்கொள்ள விரும்புகிறோம். 
 
3. முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபைகளுக்கு அதிகமாக அதிகாரத்தை வழங்குவதற்காகத்  தமது செல்வாக்கைத் தொடர்ந்து பயன்படுத்தும். தற்போதைய மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்கவோ அல்லது பலவீனப்படுத்தவோ அல்லது இந்த மாகாணசபை முறைமைக்குப் பதிலாக வேறொரு கட்டமைப்பைக் கொண்டுவரவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அவற்றை நாம் கடுமையாக எதிர்ப்போம். 
 
4. அதிகாரப்பரவலாக்கல் நடவடிக்கையை அழிக்கும் எந்தவொரு முயற்சிகளையும் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கும். அனைத்து இன மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுக்காக நாம் ஆதரவாக நிற்போம். 
 
5. மாகாணசபைகளின் தற்போதைய அதிகாரங்களை சிதைப்பதற்கான எந்தவொரு சட்டமூலத்தையும் நாம் எதிர்ப்போம். 
 
6. யுத்தம் முடிந்து 43 மாதங்கள் கடந்துவிட்டபோதிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளைப் பொருத்தமான முறையில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்காமையிட்டு நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம். 
அகதிகளை மீள்குடியமர்த்துவது தொடர்பில் அரசு தேசிய கொள்கை ஒன்றை வகுத்து நடைமுறைப்படுத்தவேண்டும். அதேபோல், இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் உள்ள வடக்கு முஸ்லிம்கள் சுலபமாக மீள்குடியமர்வதற்காகப்  பொருத்தமான பாதுகாப்பான சூழலை அரசு உருவாக்கவேண்டும். அத்தோடு, அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளையும் பாதுகாக்கவேண்டும். 
 
7. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசிடம் கோரிக்கை விடுக்கிறோம்.
 
8. இலங்கை அரசு பலஸ்தீன மக்களுடனான உறவைப் பலப்படுத்தி காஸாவில் அமைக்கப்படும் இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றுவதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.  என்பனவையே அந்த எட்டுத்  தீர்மானங்களுமாகும். 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக