இலங்கையின் தற்போதைய மனித உரிமை விவகாரங்கள், அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகள் ஆகியவை உட்பட மேலும் சில முக்கியமான விடயங்களில் அரசின் குறைநிறைகள் குறித்து மேற்படி சந்திப்புகளின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது இலங்கை விடயத்தில்
எவ்வாறான வகிபாகத்தைக் கொள்வது என்பது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்துவரும்
இந்தியா, இவ்விடயம் தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்கவிடம் மந்திராலோசனை நடத்தியுள்ளது.
இராஜதந்திர மட்டத்திலான பயணமொன்றை
மேற்கொண்டு அண்மையில் இந்தியாவுக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி
சந்திரிகா குமாரதுங்க, அந்நாட்டின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து இலங்கை
விடயங்கள் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய அரசின் அழைப்பின் பேரிலேயே அவர்
அங்கு பயணம் மேற்கொண்டார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தாலும், இதுகுறித்து
உத்தியோகபூர்வமாக அறியமுடியவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்ஷித்
சர்மா, அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாத்தாய், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட டில்லி நிர்வாகத்தின் உயர்மட்டப் புள்ளிகளுடனேயே
அவர் இலங்கை விவகாரம் குறித்துக் கலந்துரையாடியுள்ளார் எனத்தெரிகிறது.
இச்சந்திப்புகளின்போது இந்தியாவின்
சார்பில் ஜெனிவா விவகாரங்களைக் கையாளும் உயர்மட்ட இராஜதந்திரிகளும்
பிரசன்னமாகியிருந்தனர் என டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தற்போதைய மனித உரிமை
விவகாரங்கள், அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகள் ஆகியவை உட்பட மேலும் சில
முக்கியமான விடயங்களில் அரசின் குறைநிறைகள் குறித்து மேற்படி
சந்திப்புகளின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரசுக்குக் கடும் அதிருப்தி
குறிப்பாக, இலங்கையின் தற்போதைய அரசின்
செயற்பாடுகளைப் பகிரங்கமாக சாடிவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன்
இந்திய உயர்மட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளமையானது அரசுக்குக் கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்
அங்கு சென்று இங்குள்ள நிலைமைகளைத் தெளிவுபடுத்துவதற்கு முன்னர்,
அவைகுறித்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியிடம் டில்லி நிர்வாகம்
கேட்டறிந்துள்ளமை அரசுக்குச் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.
அதுவும் ஜெனிவாத் தொடர் நெருங்கும் நிலையில், மேற்படி சந்திப்புகள் இடம்பெற்றுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது.
அதேவேளை, மார்ச் மாதம் நடைபெறும்
ஜெனிவாத் தொடரில் இலங்கை விடயத்தில் எவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுப்பது
என்பது தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் ஆய்வுகளை நடத்திவரும் இந்தியா,
கடந்த தடவை நடைபெற்ற 19 ஆவது மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக
வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா
ஆதரவளித்திருந்தாலும் கடும்போக்குடைய அந்தப் பிரேரணையை அமெரிக்காவுடன்
பேச்சுநடத்தி மென்போக்கான பிரேரணையாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை
மேற்கொண்டமையும் தெரிந்ததே.
இதற்கிடையில், ஜெனிவா இராஜதந்திரச் சமர்
ஆரம்பமாவதற்கு இன்னும் சில வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் இலங்கை அரசுக்கு
நெருக்கடிகளைக் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இராஜதந்திரச்
செய்றபாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதன் ஓரங்கமாக கூட்டமைப்பு நாடாளுமன்ற
உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மனித உரிமைப் பேரவையில் அங்கம்
வகிக்கும் நாடுகளின் உயர்மட்டப் புள்ளிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.
அமெரிக்காவின் திரிசூல இராஜதந்திரக்
குழு கொழும்புக்கு பயணம் மேற்கொண்ட பின்னரே அதனைச் சந்தித்துப் பேச்சு
நடத்திய பின்னர் கூட்டமைப்பு தனது வெளிநாட்டுப் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக