தமிழ் மக்களின்
பிறப்புரிமையை எவரும் பறிப்பதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. அதிகாரம்
எமது கைகளுக்கு வரவேண்டும். சிங்களவருக்கு சமமான மக்களாக வாழ்வதற்கு
அதிகாரம் எங்களின் கைகளுக்கு வருவது அவசியம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். நேற்று சனிக்கிழமை காலை தனது
இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் உள்ளூராட்சி சபைகளின் எல்லை
மீள் நிர்ணயம் மற்றும் சமகால நிலவரம் பற்றி சம்பந்தன் உரையாற்றினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
மனித உரிமை மீறல் தொடர்கின்ற நிலையில்
சர்வதேச சமூகம் தமது முயற்சிகளை கைவிட முடியாது. தொடர்ந்து செயற்பட்டு மனித
உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று
காணப்பட வேண்டும் என்பது அரசிற்கு அவசரமானதாகாக் காணப்படவில்லை. தமிழ்
மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. நாட்டின் இறைமையில் தமிழ்
மக்களும் பங்காளிகளாக வேண்டும். தற்போதைய அரச அமைப்பு முறைமையின் கீழ் அது
சாத்தியமற்றதாகும். சாதகமான நிலை விரைவில் ஏற்பட்டு அரசியல் தீர்வு காணப்பட
வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
தற்போதைய இலங்கை நிலவரத்தை அறிந்து 2013
மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில்
அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரிகள் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று
நம்புகின்றோம்.
அமெரிக்க, இந்தியா மற்றும் சர்வதேச
சமூகமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியே அரசியல்
தீர்வு காணும்படி இலங்கை அரசை இன்றும் வலியுறுத்தி வருகின்றது. இந்த
விடயத்தில் சர்வதேச சமூகம் தெளிவாக இருக்கின்றது. இதனை கேட்டு செயற்படும்
நிலையில் அரசு தான் இல்லை.
தமிழ் மக்களின் பிறப்புரிமையை எவரும்
பறிப்பதை அனுமதிக்க முடியாது. அதிகாரம் எமது கைகளுக்கு வரவேண்டும். சமமான
மக்களாக வாழ்வதற்கு அதிகாரம் தமிழ் மக்களின் கைகளுக்கு வருவது அவசியம்.
எதிர்வரும் மாதங்களில் தற்போதைய நிலவரங்களில் மாற்றம் ஏற்படலாம். என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக