சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

6 ஜனவரி, 2013

இராணுவ மயமாக்கலின் உச்சக்கட்டத்தை சர்வதேசத்துக்கு உடன் அம்பலப்படுத்தவும்; கூட்டமைப்பை வலியுறுத்துகிறார் மனோ கணேசன்





 கிளிநொச்சி, முல்லை தீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் பாடசாலைகளில் புகுந்து இரண்டாம் மொழி கற்பிக்க முனைவது, இராணுவ ஆட்சி மயமாக்கலின் உச்சக்கட்டம். 
 
இந்த நடவடிக்கை இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்ற சிபார்சையே அப்பட்டமாக மீறுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணி யின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
இதனை உடனடியாக சர்வதேச சமுகத்தின் கவனத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவர வேண்டும், குறிப்பாக கொழும்பில் உள்ள ஐ.நா. அமைப்பின் கீழ் வரும் யுனெஸ்கோ என்ற ஐ.நா. கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவன வதிவிட பிரதிநிதியின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் எனவும், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரிய தொழிற்சங்க அமைப்புக்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பித்து இதுபற்றி தமது சர்வதேச ஆசிரிய அமைப்புக்களின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு:
 
இலங்கை இராணுவம் முதலில் எந்தவித சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளும் இல்லாமல் தமிழ்ப்பெண்களை இராணுவத்துக்கு சேர்த்தது. இப்போது வட மாகாண கல்வி அமைச்சு மூலமாக இந்த இராணுவ ஆசிரியர் செயல் முன்னெடுக்கப்படுகிறது.
 
மொழி, கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை போதிக்க ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனால் இராணுவ ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும், கல்வி போதிக்க இராணுவம் தயாராக இருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் முன்னுக்கு பின் முரணாக தெரிவிப்பது  விசித்திரமானது. தென்னிலங்கையிலும் பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. 
 
ஆனால் அங்கு இராணுவத்தினர்  பாடசாலை ஆசிரியர்களாக பணிக்கு அமர்த்தப்படுவதில்லை. ஆசிரியர் பற்றாக்குறை நிலவுமானால் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
 
கல்வித்தகைமை மற்றும் பயிற்சி பெற்றுள்ளவர்கள் இருக்கின்றார்கள். நிறைய பட்டதாரிகள் தொழில் நியமனங்களுக்காக காத்திருக்கிறார்கள். பல்வேறு பாடாசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுகின்ற பல ஆசிரியர்கள் உரிய நியமனங்களுக்காக காத்திருக்கின்றார்கள்.  
 
இவற்றை கணக்கில் எடுக்காமல், பற்றாக்குறை நிலவுகிறது என்பதை ஒரு காரணமாக கொண்டு பாடசாலைகளுக்குள் இராணுவ ஆசிரியர்களை கொண்டு செல்வது ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.
 
கல்வித்துறை அதிகாரம் மாகாணசபைகளுக்குள் வருகிறது. வடக்கில் மாகாணசபை இல்லை என்ற காரணத்தால் முன்னாள் இராணுவ அதிகாரியான வட மாகாண ஆளுநர் சந்திரசிறி சட்டத்தை தனது கையில் எடுத்துகொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறார்.
 
இந்த நடவடிக்கையை மாகாணசபை அதிகாரிகளால் தடுத்து நிறுத்த முடியாது. மாகாணசபை உறுப்பினர்கள் இல்லை என்பதால் ஆளுநர் தான்தோன்றித்தனமாக செயற்படவும்  முடியாது. உண்மையில் வடக்கில் மாகாணசபை உறுப்பினர்கள் இல்லை என்பதால் இது இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கண்காணிப்புகளின் கீழ் வருகிறது.
 
எனவே, கிளிநொச்சி மாவட்டம் உள்வரும் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரும், முல்லைத்தீவு  மாவட்டம் உள்வரும் வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரும் இது தொடர்பாக கட்சி அரசியல் பேதங்கள் இல்லாமல் உடனடியாக  களமிறங்கி இந்த நடவடிக்கையை எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும்.
 
உண்மையில் இந்த அரசு கதை வசனம் எழுதி தயாரித்து சர்வதேசத்தில் திரையிட்ட கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள சிபார்சுகளை இந்த நடவடிக்கை மீறுகிறது. 
 
அந்த அறிக்கையில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்று குறைப்பதை விடுத்து இந்த அரசு தமிழ் சமூகத்தின் அனைத்து அம்சங்களிளும் இராணுவத்தை திணிக்கிறது.
 
இதைக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்துமூலம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர ஆவன செய்யவேண்டும். அத்துடன்  அவர்கள் இதை உடனடியாக கொழும்பில் உள்ள ஐ.நா. அமைப்பின் கீழ் வரும் யுனேஸ்கோ என்ற ஐ.நா கல்வி, விஞ்ஞான, கலாச்சார நிறுவன வதிவிட பிரதிநிதியின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் எனவும் நான் கேட்டுகொள்கிறேன்.
 
அதேபோல் முல்லை, துணுக்காய், கிளிநொச்சி கல்வி வலயங்களில் நடைபெற ஆரம்பித்துள்ள இந்த சட்ட விரோத நடவடிக்கையை தொழில்ரீதியாக எதிர்த்து  இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரிய தொழிற்சங்க அமைப்புகளும் தொழிற்சங்க நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும், இதுபற்றி ஆசிரிய தொழிற்சங்கங்கள் தமது சர்வதேச ஆசிரிய அமைப்புகளின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும்'' என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக