சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

31 ஜனவரி, 2013

போர்க்குற்ற விசாரணை அழுத்தம் வலுக்கின்றது; ஆதரவு தெரிவித்து ஹிலாரிக்கு செனட்டர்கள் கடிதம்.

 
இலங்கையில் நடை பெற்ற போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட ஆவன செய்யுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம் அந்நாட்டு செனட்டர்கள் கடிதம் மூலம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
 
ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தொடர் நெருங்கி வரும் நிலையில், அமெரிக்க செனட்டர்கள் இருவர் இந்தக் கோரிக்கையை  விடுத்துள்ளனர்.
 ""பொறுப்புக்கூறும் கடமையை ஏற்பதற்கும், நல்லிணக்கத்தைக் கட்டி யெழுப்புவதற்குமான பணிகளை இலங்கை அனுசரிக்கவில்லை. இதற்காகக் கண்டனம் தெரிவித்து,
 
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவிருக்கும் பிரேரணைக்கும் நாம் ஆதரவு அளிக்கின்றோம்''  என்றும் அவர்கள் அதில் தெரிவித்துள்ளார்கள்.
 அமெரிக்க செனட்டர்களான பொப் காசி, பெட்ரிக் லேஹி ஆகிய இருவருமே வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளனர்.
 
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
 
போர் முடிவடைந்த பின்னர், தமது பிரச்சினைகளுக்கு அரசு பரிகாரம் கண்டுவிடும் என இலங்கை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளனர். 
 
எனினும், திட்டமான அல்லது நிரந்தரமான எத்தகைய முன்னேற்றமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
 இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை எட்டுவதற்கு ஐ.நாவின் நிரந்தரமான  நீடித்ததலைமைத்துவக் கண்காணிப்பு தேவை. அத்துடன், நேர்மையான பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச சமூக மட்டத்திலுள்ள ஏனையோரின் வலியுறுத்தலும் அவசியமாகும்.
 
சர்வதேச விசாரணையை அடுத்தடுத்து இலங்கை நிராகரித்தே வந்துள்ளது. இவ்விவகாரங்கள் உள்நாட்டுக்குரியவை என்றே இலங்கை கருதுகிறது. கடந்த ஆண்டு  இலங்கை அரசின் கற்றுக்கொண்ட பாடங்களுக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் முன்னெடுப்புகளுக்கு  அமெரிக்கா ஆதரவளித்துள்ளது.
 
அதேவேளை, இந்த ஆணைக்குழுவின் முன்னெடுப்புகள் சர்வதேச விசாரணை தராதரத்துக்கேற்ப அமையவில்லை எனக் காரணங்கூறி, "சர்வதேச மன்னிப்புக்கும் மனித உரிமைகள் அவதானிப்புக்குமான அமைப்பு' இவற்றில் பங்கெடுக்க மறுத்து வந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க ஒரு விடயம். நல்லிண ஆணைக்குழுவின்அறிக்கை
ஆயுதப் படைகளை மீட்டுள்ளது
 
தமிழ்ப் போராளிகள் பாரிய அட்டூழியங்களைப் புரிந்துள்ளார்கள் எனக் குற்றஞ்சாட்டும் அதேவேளை, மனித உரிமை மீறல்களிலிருந்து இலங்கை ஆயுதப் படைகளை இந்த ஆணைக்குழுவின் அறிக்கை மீட்டுள்ளது என்றே இந்த அமைப்பினர் கருதுகின்றனர்.
 
வடக்கில் சிவிலியன்களின் செயற்பாட்டுப் பகுதிகளில் இராணுவ பிரவேசமின்மை, காணாமற்போனோர், தடுப்புக்காவலில் உள்ளோர் ஆகியோர் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கையாளுவதற்கான நிர்வாக அமைப்பு உருவாக்கம், காணி திருத்தச் சட்டம், போரின்போதும் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் ஆகியவை உள்ளிட்ட பல அம்சங்களை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையானதல்ல
 
கற்றுக்கொண்ட பாடங்களுக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவும் அதன் பரிந்துரைகளும் முழுமையானவை அல்ல. இவை சமாதானத்துக்கு இலங்கை அரசின் சொந்த அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டவை. இந்த அறிக்கை நடைமுறைக்கு வந்து ஓராண்டு கடந்துவிட்டது. 
 
எனினும், நடைமுறைப்படுத்தப்படவேண்டிய கடினமான  அவசியமான செயற்பாடுகளை அமுல்படுத்துவதில் அரசு தோல்வி கண்டுள்ளது.
 கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 19/2 இலங்கையில் "நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறும் கடமையையும் ஊக்குவித்தல்' என்ற தலைப்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை விடயத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கேந்திர தலைமைத்துவ பங்கை வகித்தது.
 
இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டு தீர்மானமாயிற்று. இத்தீர்மானம் ஆணைக்குழுவின் காத்திரமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தமான கோரிக்கையை விடுத்தது. அதேவேளை, அத்துமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை சர்வதேச சட்டவிதிகளுக்கமைய முழுமையாகக் கையாளுவதில் இந்த அறிக்கை தோல்வி கண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
 
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் ஒருபுறமிருக்க, இலங்கை அரசு பொறுப்புக்கூறும் கடமையை நிறைவேற்ற எதனையும் மேற்கொள்ளவே இல்லை. ஐ.நாவினதோ, இலங்கை மக்களினதோ எதிர்பார்ப்புக்கிணங்க இலங்கை அரசு இப்பணியை மேற்கொள்ளவில்லை.
 கடந்த ஜூலையில் "இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம்' அறிவித்தலை அரசு விடுத்தது. எனினும், இத்திட்டம் ஆணைக்குழுவின் சிபாரிசுகளைப் பரிசீலிக்கும் குழுக்களையே நிறுவலாயிற்று. எவ்வித மாற்றமோ, செயற்பாடோ மேற்கொள்ளப்படவில்லை.
 
பரிந்துரைகளைச் செயற்படுத்துவதில் தோல்வி
 
இலங்கை அரசு நல்லிணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளது. அதனால் மனித அரசியல் உரிமைகள் இலங்கையில் மோசமடைந்து வருகின்றன. வடபகுதியில் பலத்த இராணுவமயமாக்கலை ஆணைக்குழுவின் அறிக்கை ஆட்சேபித்துள்ளது. அத்துடன், சிவிலியன் பகுதி இராணுவ பிரவேசமற்ற பகுதியாக இருக்கவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.
 
எனினும், இது விடயத்தில் இலங்கை அரசு திடமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. வடபகுதியில் தனியார் நிலங்களில் இராணுவப் பிரவேசம் நீடிக்கின்றது. மீள்குடியேறி அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்குப் பெரும் தடையாக உள்ளது. 
 
அதேவேளை, அஹிம்சை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மாணவர்கள் பலாத்காரமாகப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த நடவடிக்கை இலங்கையரின் அமைதியான பேச்சுரிமையைப் பறிக்கின்றது.
 
இலங்கை உச்ச நீதிமன்ற நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றவியல் தீர்மானம் குறித்தும் நாம் உன்னிப்பாகக் கருத்துச் செலுத்துகின்றோம். நீதிமன்றத் தீர்ப்புகள் வாயிலாக நீதித்துறையின் சுயாதீனத்தை கலாநிதி பண்டாரநாயக்கா பேணி வந்துள்ளார். 
 உணர்வுபூர்வமான விடயங்கள் குறித்து துணிச்சலான கருத்துகளை வெளியிடும் ஊடகவியலாளர்களும் மனிதநேயத் தொண்டர்களும் தொடர்ந்து தொல்லைகளுக்கும் மிரட்டல்களுக்கும் முகங்கொடுத்து வருகிறார்கள். சிறைவாசத்தையும் அனுபவிக்க நேரிடுகிறது.
 
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள சரமாரியான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணை நடத்தி குற்றவாளிகள் நீதிக்குமுன் நிறுத்தப்படவேண்டும். 
இதில் இலங்கை அரசு தவறும் பட்சத்தில் சுயாதீனமான ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்யுமாறு 2011ஆம் ஆண்டு நவம்பரிலும் நாங்கள் தங்களைக் கடிதம் மூலம் கேட்டிருந்தோம். அதனையும் இங்கு நினைவுகூருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக