பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்தது.
அத்துடன், இது விடயம் தொடர்பில் பிரதம
நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டார நாயக்கவால் கோரப்பட்டிருந்த
எழுத்தாணையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது.
தமக்கு எதிரான நாடாளுமன்றத்
தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கையின் நடைமுறைப்படுத்தலை இடைநிறுத்த
உத்தரவிடுமாறு கோரிப் பிரதம நீதியரசரால் மேன்முறையீட்டு நீதிமன்றில்
தாக்கல் செய்யப்பட்டிருந்த "ரிட்' மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஸ்ரீஸ்கந்தராஜா, ஏ.டபிள்யூ.ஏ சலாம்,
அனில் குணரட்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த
விசாரணை இடம்பெற்றது. அதன்போதே மேற்படி பரபரப்பான தீர்ப்பு
அறிவிக்கப்பட்டது.
கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவால்
தாக்கல் செய்யப்பட்டிருந்த "ரிட்' மனு கடந்த 21 ஆம் திகதி மேன்முறையீட்டு
நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அந்த மனுவில்
பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தவர்களை ஜனவரி 03 ஆம் திகதி
நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல்
விடுத்தது.
சபாநாயகர், நாடாளுமன்றச் செயலாளர்
நாயகம், தெரிவுக்குழுவில் இடம்பெற்றிருந்த 11 உறுப்பினர்கள் ஆகியோரே ஆணை
கோரும் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களான
சம்பந்தன், விஜித்த ஹேரத் ஆகியோரைத் தவிர ஏனையோர் மேன்முறையீட்டு
நீதிமன்றத்தின் அறிவிப்பை நிராகரித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன்
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால் அவர் சார்பில் அவரது
சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையானார்.
ஜனவரி மூன்றாம் திகதி பிரதம நீதியரசரின்
"ரிட்' மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த மனுவில்
பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி
நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அறிவித்தல்
விடுத்தது.
அத்துடன், ஜனவரி 07 ஆம் திகதி சட்டமா
அதிபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணிப்புரை விடுத்து வழக்கு விசாரணையை
ஒத்திவைத்தது. இதன் பிரகாரம் நேற்று மீண்டும் பிரதம நீதியரசரின் "ரிட்' மனு
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின்
விசாரணைக்கு தடைவிதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள்
தொடர்பில், அரசமைப்பின் பொருட் கோடலை மேன்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதி
மன்றத்திடம் கோரியிருந்தது.
இதன்பிரகாரம், உயர் நீதிமன்றத்தால்
அனுப்பிவைக்கப்பட்டிருந்த சட்டவியாக்கியானத்தில், "நாடாளுமன்ற நிலையியற்
கட்டளைகள் என்பது சட்டமல்ல. எனவே, நிலையியற் கட்டளையின் 78 (ஏ)
பிரிவுக்கடைய நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் சட்டவலுவற்றது.
நீதியரசரை குற்றவாளியென அறிவித்துத் தண்டிக்கும் அதிகாரம் அதற்கு
கிடையாது'' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது என்று கடந்த மூன்றாம் திகதி
மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணை
அறிக்கை செல்லுபடியற்றதென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள
நிலையில், குறித்த விசாரணை அறிக்கையை எதிர்வரும் 10, 11 ஆம் திகதிகளில்
விவாதத்துக்கு எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
அரசின் இந்த முடிவு நீதித்துறைக்கும்
சட்டவாக்கத்துக்கும் இடையிலான பிரச்சினையை மேலும் உக்கிரமடையச் செய்யும் என
சட்டவல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக