எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் இலச்சியவாதிகளான நாம் சரியாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
9 டிசம்பர், 2013
இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட போர்க்குற்றங்களை நிரூபி்த்தது பிரிட்டன்
இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகளை வலுப்படுத்தும் காரணங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானிய நீதித்துறை, இலங்கை அரசாங்கம் தொடர்பில் பிரித்தானியா அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடுகளை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு பரந்துபட்ட மற்றும் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியது என்ற பிரித்தானிய அரசின் நிலைப்பாட்டை அந்நாட்டு நீதித்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தின் குடியேற்றம், புகலிடம் சபையின் நீதிபதிகள் இருவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவரின் புகலிடக் கோரிக்கை தொடர்பான மேன்முறையீட்டை ஆராய்ந்த போது மேற்படி விடயத்தை கண்டறிந்துள்ளனர்.
மேன்முறையீடு செய்த பொலிஸ் அதிகாரியின் பாதுகாப்பு கருதி அவரது பெயர் திரு ஏ.எஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட இந்த அதிகாரி 2007 ஆம் ஆண்டு வரை பொலிஸ் சேவையில் பணியாற்றியதுடன் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் இருந்து வெளியேறினார். தமிழர்களை கடத்திச் செல்லும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விசேட பிரிவில் இந்த அதிகாரி பணியாற்றியுள்ளார். தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை அல்லது பாதாள உலக குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை வழங்கி நபர்கள் பற்றிய தகவல்களை இந்த அதிகாரி கசிய விட்டிருக்கலாம் என அரசாங்கம் சந்தேகம் கொண்டுள்ளதால், தனக்கு ஆபத்து ஏற்படும் என்று இந்த அதிகாரி அச்சம் கொண்டிருந்தார். இதனையடுத்து நாட்டில் இருந்து வெளியேற அவர் தீர்மானித்தார். இலங்கை திரும்பினால் அரசாங்கத்தினால் தான் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்தை அடிப்படையாக வைத்து அவர் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்தார். எனினும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் அவரது புகலிடக் கோரிக்கையை நிராகரித்தது.
இதனையடுத்து அந்த அதிகாரி உள்துறை திணைக்களத்தின் செயலாளரின் முடிவை எதிர்த்து குடிவரவு மற்றும் புகலிட தொடர்பான முதல் தீர்ப்பாயத்தில் மேன்முறையீடு செய்தார். எனினும் தீர்ப்பாயம் மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், உள்துறை திணைக்களத்தின் செயலாளரின் முடிவுவை உறுதிப்படுத்தியது. இதனையடுத்து அந்த அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். இந்த மேன்முறையீட்டை தள்ளுப்படி செய்த சிரேஷ்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், பொதுமக்கள் குறிப்பாக தமிழ் இன மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட திட்டமிட்ட மற்றும் பரந்துப்பட்ட தாக்குதலுக்காக இயக்கிய விசேட பிரிவில் இந்த அதிகாரி பணியாற்றியுள்ளதை கண்டறிந்துள்ளனர். -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக