நாம் தமிழர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு
தமிழ்நாட்டில் கற்பழிப்பு – அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தனித்த துரித நடவடிக்கை தேவை: நாம் தமிழர் கட்சி
பள்ளிக்கூடத்திற்கு
தனியாக சென்ற 7 வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்ச்சிக்கு
உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
பெண்களுக்கு தமிழரின் வாழ்விலும், பண்பாட்டிலும் உயர்ந்த இடத்தை அளித்துள்ள
தமிழ்நாட்டில் இப்படியொரு கொடூர சம்பவம் நடந்திருப்பது தமிழினத்திற்கு
பெரும் தலைக்குனிவாகும்.
இக்குற்றத்தில்
ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கை விரைவாக
விசாரித்து தண்டனை வழங்குவது முக்கியமாகும். தமிழ்நாட்டில் இப்படியான
பாலியல் வன்புணர்ச்சி நிகழ்வுகள் அதிகரித்து வருவதுதான் மிகுந்த
கவலையளிக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் கடந்த செப்டம்பர் மாதம் வரை 526
வன்புணர்ச்சி புகார்கள் காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்
பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்கு
பெரும் அத்தாட்சி எதுவெனில், அந்த மாநிலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு
உறுதியானதாக இருக்க வேண்டும்.
பள்ளி,
கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் முதல் அன்றாடப் பணிகளுக்கு சென்று
திரும்பும் பெண்கள் வரை அவர்கள் அனைவரும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக
உணர வேண்டும். ஆனால் அப்படியொரு நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் இல்லை என்பதே
பள்ளி மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதும்,
ஐநூற்றுக்கும் அதிகமான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி புகார்களை
அளித்திருப்பதுமாகும். இதில் கவலை தரும் விடயம் என்னவெனில், நமது தாய்
மண்ணில் பெண்கள்தான் எல்லாவிதமான வன்முறைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
தன்னை
காதலிக்க மறுத்த ஒரு படித்த இளம் பெண்ணின் முகத்தின் மீது கட்டட வேலை
பார்க்கும் இளைஞர் ஒருவர் அமிலத்தை வீசி, அவரது பார்வையையும், முகத்தையும்
சிதைத்துள்ளார். சாதி ரீதியான அரசியல் அமைப்புகளும், கட்சிகளும் கூட,
தங்களின் சாதிய வெறுப்புணர்வை தாங்கள் எதிர்க்கும் சாதிகளின் பெண்கள்
மீதுதான் கொட்டுகின்றன, தாக்குகின்றன. பணியிடங்களிலும் பெண்கள் மீதான
பாலியல் வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ்ப் பெண்களின் மீதான
இப்படிப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் தமிழினத்தின் பண்பாடு மீதான தாகுதலே
என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே,
பெண்களுக்கு எதிரான இப்படிப்பட்ட பாலியல் தாக்குதல்களை கட்டுப்படுத்த
தமிழக அரசு தனித்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பாலியல்
வன்செயல்களை முளையிலேயே கிள்ளி எரியவில்லையெனில், பண்பாட்டுப் பெருமைமிக்க
தமிழ் மண்ணும் டெல்லியைப் போல் பெண்களுக்கு நகரமாகிவிடும் அபாயம்
ஏற்பட்டுவிடும்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக