இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
இந்திய விஜயத்தைக் கண்டித்து, கடலூர் மாவட்டத்தில், ரயில் மறியலில்
ஈடுபட்ட, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், 2,413 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம், சாஞ்சியில், இன்று
நடக்க உள்ள, புத்த பல்கலை அடிக்கல் நாட்டு விழாவில், இலங்கை ஜனாதிபதி
பங்கேற்கிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சார்பில், கடலூர் முதுநகரில், சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை, கட்சியின் நிறுவனர்,
வேல்முருகன் தலைமையில் மறித்த, 100 பெண்கள் உட்பட, 1,500 பேரை,
காவல்துறையினர் கைது செய்தனர்.
வேல்முருகன் கூறுகையில், "ராஜபக்ஷ இந்தியா
வரும் போதெல்லாம், போராட்டம் நடத்தப்படும். கட்சி சார்பில், இன்று, சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையத்தில், வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களை
மறித்து, போராட்டம் நடத்தப்படும்´ என்றார்.
சிதம்பரத்தில் கவுன்சிலர் ரமேஷ்
தலைமையில், சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்த, 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலத்தில் மாநில துணை பொதுச் செயலர் கண்ணன் தலைமையில், குருவாயூர்
எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்த, 413 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், விழுப்புரம் ரயில் நிலையத்தில்,
காலை 10.55 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை, தமிழக வாழ்வுரிமை
கட்சியின் மாநில துணை பொதுச்செயலர்கள் ரவிஅலெக்ஸ், சுரேஷ்குமார் தலைமையில்
மறித்த 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக