சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

24 ஜனவரி, 2013

சிறுபான்மையினரை பயப்பீதியில் ஆழ்த்தவே இலங்கை அரசு புலிப் பூச்சாண்டி காட்டுகிறதுகைது நடவடிக்கையை கைவிடவேண்டும் என்கிறார் சங்கரி


விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்து இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் என 1400 பேர் உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கின்றேன்.  
 
அத்துடன் ஆயிரக்கணக்கான அப்பாவி இலங்கை பிரஜைகள் கொல்லப்படுவதற்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ரவைகள் போன்றவற்றை தந்துதவிய கே.பி என அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனும் இந்த 1400 புலி போராளிகளுக்குள் அடக்கப்பட்டுள்ளாரா என்று மிக்க ஆர்வமாக இராணுவத்தினரை கேட்க விரும்புகின்றேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது தொடர்பில் ஆனந்த சங்கரி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளார்கள் என அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழிப்பதென பிறநாடுகளுக்கு கருத்தரங்குகள், பயிற்சி முகாம்களை நடாத்தி வருகின்றது.
 
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாகக் கூறி மூன்றரை வருடங்கள் கழிந்து விட்ட நிலையில் இந்த நாட்டில் எப்பகுதியிலும் விடுதலைப் புலிகள் இருப்பதற்கு சாத்தியம் இல்லை என நான் உறுதியாக நம்புகின்றேன். 
 
அப்படி ஒருசிலர் தப்பித்தவறி இருப்பின் அவர்களை கணக்கிலெடுக்கத் தேவையில்லை. ஏனெனில் கடந்த மூன்றரை ஆண்டுக்குள் ஒரு துப்பாக்கிச்சூட்டு சத்தம்கூடக் கேட்கவில்லை. அப்படியொரு உயிரிழப்பும் நடைபெறவில்லை.
 
இந்த நிலையில் விடுதலைப் புலிகளை வேட்டையாடுவதாக கூறிக்கொண்டு நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடுமேயானால் எதுவித சம்பந்தமும் இல்லாத அப்பாவி இளைஞர்கள் தலைமறைவாக வாழ முற்படுவர்.
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரனின் அலுவலக பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் இந்த ஆபத்தான நடவடிக்கைக்கு முன்னோடியாகும்.
 
இவற்றை அடிப்படையாக வைத்து வடக்குக் கிழக்கில் படை பலத்தை பேணுவதற்கு அரசு முயற்சிக்கிறது. இராணுவ முகாம்களை புதிதாக அமைப்பது, பலப்படுத்துவது, போர் தளபாடங்களை கொள்வனவு செய்வது போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாகப் பேண அரசு விரும்புகிறது. 
 
அதுமட்டுமல்ல சிறுபான்மை மக்களை நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழ வைப்பதற்கு முயற்சிக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைகழக மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் உதவியாளர்கள் உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும். என்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக