சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா என்ற இடத்தில் நேற்று இரவு 100
க்கும் மேற்பட்ட வங்காளதேசத் தொழிலாளர்களும், சில இந்தியத் தொழிலாளர்களும்
சேர்ந்து கலக்கத்தில் ஈடுபட்டத்தில் 18 பேர் காயமுற்றனர். அத்துடன்
காவல்துறை வாகனங்களும் கொளுத்தப்பட்டன.
தனியார் பேருந்து ஒன்று இந்தியாவைச் சேர்ந்த 33 வயதான தொழிலாளியை
மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்ததால் இக்கலவரம் உருவானதாகக்
கூறப்படுகிறது.
கூறப்படுகிறது.
கடந்த 40 ஆண்டு காலத்தில் சிங்கப்பூரில் இப்படி ஒரு கலகம் ஏற்பட்டது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், 400 பேர்
இக்கலவரத்தில் ஈடுபட்டனர் என்றும், 10 காவல்துறையினர், 4 அரசு அதிகாரிகள்,
பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட 18 பேர் காயமுற்றனர் என்றும்
தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக 27 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள்
சிறை தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படலாம்.
இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் வெளியிட்டுள்ள
அறிக்கையில், “கலவரம் உருவாக எந்த ஒரு சூழல் காரணமாக இருந்தாலும் அதற்கு
மன்னிப்பு கிடையாது. அது ஒரு வன்முறை, கட்டுப்பாடு மீறல் மற்றும் குற்றம்
சார்ந்த நடத்தை. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு
நீதியின் முன் நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை ஆணையர் நங் ஜூ ஹீ
கூறுகையில், “கலவரத்தில் ஈடுபடுதல், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல்
என்பது சிங்கப்பூரின் கலாச்சாரம் கிடையாது. நேற்று இரவு நடந்த இந்த சம்பவம்
சகித்துக் கொள்ள முடியாத ஒன்று” என்று தெரிவித்தார்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில், லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும்
அந்த பகுதி, அந்நியத் தொழிலாளர்களால் நிரம்பி வழியும். விடுமுறை நாளில்
அங்கு ஒன்றாய் கூடும் அவர்கள் பொருட்கள் வாங்குவது, சாப்பிடுவது மற்றும்
மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
ஆயுதமேந்தி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஆயுதமேந்தி இறப்புக்கு
காரணமாக இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரம்படியும்
வழங்கும் கடுமையான சட்டம் சிங்கப்பூரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்த காணொளி யூடியூப் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக