விசாரணைகளின்றி நீண்டகாலமாக
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை
செய்ய வேண்டும் என புதிய மகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர்
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ள தியாகராஜா பிரபாகரன் என்ற 24 வயதுடைய சிறைக்கைதியே இந்த போராட்டத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளார். அத்துடன் தனது கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசியல் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கு அவர் ஒரு பகிரங்கக் கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நீண்ட காலமாக விசாரணைகளின்றியும் விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி சாத்வீக ரீதியிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முதல் தியாகராஜா பிரபாகரன் ஆகிய நான் புதிய மகசின் சிறைச்சாலையில் ஆரம்பித்துள்ளேன் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த காலங்களில் பலவிதமான உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்ட போது, பல வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்கியிருந்தும், எதனையும் இதுவரையில் நிறைவேற்றவில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். எப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களை உடையவர்களாக இருந்தாலும், ஒரு வருட புனர்வாழ்வுப் பயிற்சியளித்து விடுதலை செய்வதாக கடந்த 28.06.2012 அன்று, சிறைச்சாலை திணைக்களத்தின் விசேட ஆணையாளர் காமினி குலதுங்க, அனைத்து கைதிகளிடமும் வெள்ளைத்தாளைக் கொடுத்து அவர்களின் ஒப்புதல் கடிதங்களைப் பெற்றுச் சென்றார். தற்போது எட்டு மாதங்கள் கடந்த நிலையிலும், அவர் எங்களிடமிருந்து பெற்றுச் சென்ற கடிதங்களுக்கு இதுவரையிலும், எந்த விதமான பதிலும் இல்லை. அத்துடன் நீதியமைச்சர், ரவூப் ஹக்கீமும், சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வாவும் விசேட நீதிமன்றங்களை அமைத்து, அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதாக உறுதியளித்திருந்தார்கள். ஆனால், மன்னாரில் ஒரு விசேட நீதிமன்றம் அமைத்ததாகப் பிரசாரம் செய்தார்களே தவிர விசேடமாக எந்த நீதிமன்றத்தையும் இதுவரையில் அமைக்கவில்லை. மன்னார் நீதிமன்றமானது, விசேட நீதிமன்றங்கள் அமைப்பதாகத் தெரிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, அந்த மாவட்டத்திற்கென அமைக்கப்பட்ட மேல் நீதிமன்றமாகும். எனவே, பாராளுமன்றத்திலும் வெளியிலும் உறுதிப்படுத்தப்பட்ட வகையில் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படவுமில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டங்களையும், அந்த விடயம் தொடர்பான விடயப் பதிவுகளையும் பார்த்தால், அவர்களுக்கு வெறும் ஏமாற்றங்களும், வெற்று வாக்குறுதிகளுமே வழங்கப்பட்டிருப்பதைக் காணலாம். இது எமக்குப் பெரும் வேதனைகளையும், மன உளைச்சலையுமே ஏற்படுத்தியிருக்கின்றது. இது ஒரு புறமிருக்க, யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்டு, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர், சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட யுத்த கைதிகளுக்கென விசேட நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, புனர்வாழ்வுப் பயிற்சியின் மூலம் அவர்களை விடுதலை செய்ய முடியுமானால், அவர்கள் இணைந்திருந்த அமைப்பிற்குப் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தார்கள், ஒத்தாசையாக இருந்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பதில் தாமதம் ஏன் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக ஒன்றுக்குப் பத்து என வழக்குகளை சோடித்து தாக்கல் செய்து, நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் பல வருடங்களாகத் தடுத்து வைத்திருக்கும் எங்களுக்குப் பெரும் துயரத்தை அளித்திருக்கின்றது. அத்துடன் இந்த நடவடிக்கையானது, எமது பெற்றோர் மற்றும் குடும்ப உறவினர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தைளூயும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு, நீண்டகாலமாக அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறைச்சாலைகளில் வாடுகின்ற நாங்கள், எமது குடும்பங்களுடன் இணைந்து வாழ்வதற்குரிய சூழலை, அனைவரும் உருவாக்கித் தர வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். எமது விடுதலை தொடர்பாக முன்னேற்றங்கள் ஏற்படும் வரையில் இந்த உண்ணாவிரதத்தை நான் கைவிடப் போவதில்லை என்பதைக் குறிப்பாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
சிந்தனைத்துளிகள்....
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
21 பிப்ரவரி, 2013
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் கைதி ஒருவர் உண்ணாவிரதம்
(செய்தி-யாழ்தீபன்) புலம்பெயர் தமிழர்களை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக