சிறிலங்காவில் மக்கள் எமக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்வதைப்
போல, பிரித்தானியர்கள் ஒருபோதும் எம்மை வெறுக்கவில்லை
அனைத்துலகச் சட்டங்களை மதித்து
நடக்கின்ற ஜனநாயக அரசாங்கம் எனத் தன்னைத் தானே கூறிக்கொள்ளும் சிறிலங்கா
அரசாங்கமானது பெருமளவான மனித அழிவுக்கு காரணமாகியுள்ளது. இந்த அரசாங்கம்
தொடர்பாகவே நாம் விசாரணை செய்கிறோம். இந்த மக்களா? அல்லது அந்த மக்களா?
பெருமளவில் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பாக நான் விவாதிக்க விரும்பவில்லை.
ஆனால் பெருமளவான மீறல்களைப் புரிந்துள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் சில
குறிப்பிடத்தக்க குற்றங்களை நாம் விசாரணை செய்ய வேண்டும். சிறிலங்கா
அரசாங்கத்தை விட, தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் மோசமானவர்கள் எனக்
கூறுவது பொருத்தமானது அல்ல. - கலும் மக்ரே [Callum Macrae] Ceylon Today ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் இதனை சுட்டிக் காட்டியுள்ளார்.
தற்போது
சூடான விவாதத்தை உண்டுபண்ணியுள்ள சனல்4 தொலைக்காட்சி சேவையின் "பாதுகாப்பு
வலயம்" "சிறிலங்காவின் கொலை வலயங்கள்" என்கின்ற காணொலிகளின் இயக்குனரான
கலும் மக்ரே [Callum Macrae] சிறிலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய அமைப்பின்
அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாடு தொடர்பான செய்தியைச்
சேகரிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த போது Ceylon Today ஊடகத்திற்கு கலும் மக்ரே அவர்கள் வழங்கிய நேர்காணல்
தான்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவுக்கு பயணம் செய்திருந்ததாகவும்,
அன்பான மக்கள் வாழும் ஒரு அழகான நாடாக சிறிலங்கா உள்ளதாக தான் முதலில்
அறிந்ததாகவும் அதுவே சிறிலங்காவுக்கு வருவதற்கு தன்னைத் தூண்டியதாகவும்
கலும் மக்ரே தனது நேர்காணலின் போது குறிப்பிட்டார். ஆனால்
எதுஎவ்வாறெனினும், கலும் மக்ரேயும் சனல்4 தொலைக்காட்சிச் சேவையைச் சேர்ந்த
இவரது குழுவினரும் சிறிலங்காவில் தங்கியிருக்கும் இக்காலப்பகுதியில்
'மிகவும் இறுக்கமான' சூழ்நிலையைச் சந்திக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.
சனல் -04 தொலைக்காட்சிச் சேவையின் ஊடகவியலாளரான கலும் மக்ரேயுடனான நேர்காணலின் விபரம் வருமாறு:
கேள்வி: நீங்கள் அதிபர் ராஜபக்சவைச் சந்தித்துள்ளீர்களா?
பதில்: இல்லை, நான் அதிபரைச் சந்திக்கவில்லை. ஆனால் எனது சக ஊடகவியலாளரான ஜொனதன் மில்லர் சிறிலங்கா அதிபரைச் சந்தித்துள்ளார்.
கேள்வி: அதிபருடனான சந்திப்பின் போது ஏதாவது முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதா?
பதில்: அவ்வளவு
முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்படவில்லை. நான் அந்தச் சந்திப்பில்
இருக்கவில்லை. ஆனால் "போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு நீங்கள் தான்
பொறுப்பாளி என தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நீங்கள்
வருத்தப்படுகிறீர்களா?" என ஜொனதன், சிறிலங்கா அதிபரிடம் வினவியிருந்தார்.
அதற்கு சிறிலங்கா அதிபர் "இல்லை, நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை"
எனப் பதிலளித்தார்.
கேள்வி: நீங்கள் சிறிலங்கா அதிபரைச் சந்திக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?
பதில்: நிச்சயமாக, நான் அவரைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். அவரிடம் வினவுவதற்கு என்னிடம் சில கேள்விகள் உள்ளன.
கேள்வி: சிறிலங்கா அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது உங்களது நிகழ்ச்சி நிரலில் உள்ளதா?
பதில்: நான்
ஊடகவியல் சார் நிகழ்ச்சி நிரலை மட்டுமே கொண்டுள்ளேன். உண்மை என்ன என்பதை
வெளிப்படுத்தி உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரணை செய்வதே
எனது தொழிலாகும். போர் மீறல்கள், போர் மீறல்கள் தொடர்பான
குற்றச்சாட்டுக்கள், நாடுகளின் தலைவர்கள் தவறான நடத்தைகள் போன்றன தொடர்பாக
நான் பல்வேறு காணொலிகளைத் தயாரித்துள்ளேன்.
இந்தவகையில்,
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான முதலாவது
காணொலியை நான் தயாரிக்க வேண்டும் எனக் கேட்டனர். இந்நிலையில், இந்தக்
காணொலிகளை நான் தயாரித்ததற்கான காரணம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டியது
மிகவும் முக்கியமானது என நான் கருதுகிறேன். ஈராக் மற்றும் பிரித்தானியாவும்
அமெரிக்காவும் ஈராக்கில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பது
தொடர்பாக ஏன் நான் காணொலிகளைத் தயாரிக்கவில்லை என மக்கள் மீண்டும் மீண்டும்
என்னிடம் கேட்கின்றனர். ஈராக் மற்றும் ஈராக்கிற்கு எதிராக ஈராக்கில்
நிறுத்தப்பட்டுள்ள கூட்டணிப் படைகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட
குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நான் பல காணொலிகளைத் தயாரித்துள்ளேன்.
நான்
சிறிலங்கா தொடர்பான காணொலிகளை விட ஈராக் தொடர்பில் பல காணொலிகளைத்
தயாரித்துள்ளேன். ஈராக்கிய கைதிகள் பிரித்தானியப் படைகளால் படுகொலை
செய்யப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மிகப் பெரிய விசாரணை
தற்போது மேற்கொள்ளப்படுகிறது. இந்த விசாரணைக்கான சாட்சியங்களை நான்
வழங்கியுள்ளேன்.
கேள்வி: ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களால் இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் நீங்கள் ஏன் ஆவணம் எதனையும் தயாரிக்கவில்லை?
பதில்: நான்
தமிழீழ விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட மீறல்களையும் சிறிலங்கா
அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட மீறல்களையும் எனது காணொலியில் ஆதாரத்துடன்
உறுதிப்படுத்தியுள்ளேன். இறுதிக் கட்டப் போர் இடம்பெற்ற இறுதி நான்கு
மாதங்களில் என்ன நடந்தது என்பதை அடிப்படையாக வைத்தே நான் எனது காணொலியைத்
தயாரித்துள்ளேன். போரின் போது இடம்பெற்ற எல்லா மீறல்களையும் நான் ஆழமாக
விசாரித்துள்ளேன்.
தற்கொலைத்
தாக்குதல் யுக்தி மற்றும் சிறுவர்களைப் படையில் இணைத்தமை ஆகிய முக்கிய
குற்றச்சாட்டுக்களை நான் புலிகளுக்கு எதிராக முன்வைத்துள்ளேன். அப்பாவிப்
பொதுமக்கள் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்
காட்சிகளை நான் எனது காணொலியில் பதிவு செய்துள்ளேன். மரதன் ஓட்டப் பந்தய
நிகழ்வொன்றில், புலிகள் அதில் கலந்துகொண்ட அரசியல்வாதி ஒருவரைக் குறிவைத்து
தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நிகழ்த்திய போதிலும் அதில் பொதுமக்கள் பலர்
படுகொலை செய்யப்பட்ட காட்சிகளை நான் பதிவேற்றியுள்ளேன்.
போரில்
பங்கு கொண்ட இரு தரப்பினரும் பல்வேறு மீறல்களைப் புரிந்தனர் என்பதே
உண்மைநிலையாக உள்ளபோதிலும், சிறிலங்கா அரசாங்கப் படைகளின் தாக்குதலிலேயே
பெருமளவான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது சாதாரணமாக
உறுதிப்படுத்தக் கூடிய ஒரு காரணியாகும். புலிகளால் இழைக்கப்பட்ட மீறல்களைக்
காரணங்காட்டி சிறிலங்கா அரசாங்கம் தனது குற்றங்களை மறைக்க முடியாது.
இதேபோன்று சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட குற்றங்களைக் காரணங்காட்டி
புலிகளின் மீறல்களை நியாயப்படுத்த முடியாது.
தமிழீழ
விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட மீறல்களை நான் ஒருபோதும்
நியாயப்படுத்தவில்லை. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது தான் ஜனநாயக ஆட்சியை
நடாத்துவதாகவும், அனைத்துலக உயர் மட்டச் சட்டங்களை மதிப்பதாகவும்
கூறுகின்றது.
நான்
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரணையை முன்னெடுப்பதால்
புலிகளின் ஆதரவாளர் என எனக்கு முத்திரை குத்தப்பட்டுள்ளது. இது மிகவும்
ஆபத்தானது. நான் கொழும்பு வீதிகளில் தனியாக நடந்து செல்ல முடியாதுள்ளது.
இது பாதுகாப்பற்றது. கிளிநொச்சி நோக்கி நான் தொடரூந்தில் பயணித்த போது
பாதுகாப்பற்ற தன்மையை நான் உணர்ந்தேன். இது மக்களின் குற்றம் அன்று.
அவர்களுக்கு கூறப்படுகின்ற மிகப் பெரிய பொய்யை மக்கள் நம்புகின்றனர்.
கேள்வி: எது
எவ்வாறிருப்பினும், நீங்கள் உங்களது ஆவணங்களில் தமிழீழ விடுதலைப்
புலிகளால் இழைக்கப்பட்ட மீறல்களை விட சிறிலங்கா இராணுவத்தால் இழைக்கப்பட்ட
மீறல்களையே அதிகம் முதன்மைப்படுத்தியுள்ளீர்கள். இந்நிலையில் இவ்விரு
தரப்புக்களாலும் இழைக்கப்பட்ட குற்றங்களை நீங்கள் சமமான பார்வையுடன்
நோக்கியுள்ளீர்கள் என நீங்கள் எவ்வாறு கூறமுடியும்?
பதில்: அனைத்துலகச்
சட்டங்களை மதித்து நடக்கின்ற ஜனநாயக அரசாங்கம் எனத் தன்னைத் தானே
கூறிக்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கமானது பெருமளவான மனித அழிவுக்கு
காரணமாகியுள்ளது. இந்த அரசாங்கம் தொடர்பாகவே நாம் விசாரணை செய்கிறோம். இந்த
மக்களா? அல்லது அந்த மக்களா? பெருமளவில் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பாக
நான் விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் பெருமளவான மீறல்களைப் புரிந்துள்ள
சிறிலங்கா அரசாங்கத்தின் சில குறிப்பிடத்தக்க குற்றங்களை நாம் விசாரணை
செய்ய வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தை விட தமிழீழ விடுதலைப் புலிகள்
மிகவும் மோசமானவர்கள் எனக் கூறுவது பொருத்தமானதல்ல.
கேள்வி: இந்த ஆவணங்களைத் தயாரிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்கள் உங்களுக்கு நிதி செலுத்தியுள்ளார்களா?
பதில்: சனல்4
திறந்த கணக்கைக் கொண்டுள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனமாகும். இது ஒரு
நம்பகமான, தெளிவான நிறுவனமாகும். எவரேனும் இதனை ஆய்வு செய்து கண்காணிக்க
முடியும். நாங்கள் முதலாவது காணொலியைத் தயாரித்த போது, இதற்கான நிதியை யார்
தந்து உதவினார்கள் என்பதை குறிப்பிட்டிருந்தோம். இதற்கான நிதியானது
முற்றிலும் தொண்டர் நிறுவனங்களிடமிருந்தே கிடைக்கப்பெற்றன. தமிழ்
மக்களிடமிருந்து நாம் ஒரு சல்லிக் காசு கூடப் பெறவில்லை.
தற்கொலைக்
குண்டுதாரிகள், தமது சொந்த மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்
மேற்கொண்டவர்கள், பாதுகாப்பு வலயத்தை விட்டு வெளியேற முயன்ற மக்களைத்
தடுத்தவர்கள் என்றெல்லாம் புலிகள் மீது நான் குற்றம் சுமத்தியுள்ள
நிலையில், தம்மைப் போர்க் குற்றவாளிகள் என அறிவித்த ஒருவருக்கு அவர்கள்
நிதி வழங்கியிருக்க முடியுமா என்பதை கற்பனை செய்து பாருங்கள். இது
முட்டாள்தனமானது.
கேள்வி: ஆனால்
புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து பெருமளவான நிதியைச் சேகரிப்பதற்கான
சூழ்நிலையை உருவாக்குவதற்கு நீங்கள் இதனைப் பயன்படுத்தினீர்களா?
பதில்: இந்த
ஆவணப் படத்தைத் தயாரிப்பதற்கான நிதியை விட இதனால் மேலதிகமாக நான் எவ்வளவு
நிதியைப் பெற்றேன் என்பதை எனது மனைவியிடம் கேட்டுப் பாருங்கள். எனது மனைவி
இந்த ஆவணத்தைத் தயாரித்தது தொடர்பில் என்னுடன் கோபமாக உள்ளார். இதனை
நீங்கள் ஏன் செய்தீர்கள் என என்னிடம் கேட்கிறாள். நான் ஒரு வெற்றிகரமான
திரைப்பட இயக்குனர். ஏனைய திரைப்படங்களை இயக்குவதன் மூலம் நான் நிறையப்
பணம் சம்பாதிக்க முடியும். அது மிகவும் இலகுவானதும் ஆபத்துக்
குறைந்ததாகவும் இருக்கும். ஊடகவியலாளன் என்ற வகையில், நான் விசாரணைகளை
மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிந்துள்ளேன். நான் கண்டறிந்த உண்மை பொய் எனக்
கூறப்படுகிறது. சாட்சிகள் பொய் எனக் கூறப்படுகின்றன. நான் புலிகளின்
கூலிப்படையாக இருப்பதன் மூலம் ஊடகத்துறையைப் பாதுகாக்க வேண்டியதில்லை.
கேள்வி: நீங்கள்
எதையும் எழுதலாம் அல்லது தயாரிக்கலாம் ஆனால் ஒருவருக்காக நீங்கள் பரப்புரை
செய்யக் கூடாது என்பது ஊடகத்திறையின் பண்புகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.
நீங்கள் நான்கு ஆவணங்களைத் தயாரித்துள்ளீர்கள். அதாவது அடுத்த ஆவணத்தை
தயாரிக்க உள்ளீர்கள். நீங்கள் எதனைச் செய்துள்ளீர்கள் என்பதை
வெளிப்படுத்துவதற்காகவே தற்போது சிறிலங்காவுக்கான பயணத்தை
மேற்கொண்டுள்ளீர்கள். இந்தக் கருத்துச் சரியானதா?
பதில்: இன்னொரு
ஆவணத்தைத் தயாரிப்பதற்கான திட்டத்தை நான் இதுவரை கொண்டிருக்கவில்லை.
பிறிதொரு ஆவணத் திரைப்படத்தைத் தயாரிப்பதற்கான சாட்சியங்களை நான் பெற்றால்
அதனைச் செய்வேன். பாதுகாப்பு வலயம் என்கின்ற ஆவணப் படமானது ஒரு சிறப்புத்
திரைப்படமாகும். சிறிலங்காவின் கொலைக் களங்கள் தொலைக்காட்சிக்காகத்
தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்களாகும். எவ்வாறெனினும், சிறப்புத் திரைப்படம்
என்பது தொலைக்காட்சிக்கான ஆவணப்படத்திலிருந்து சிறிது வேறுபட்டதாகும். இது
திரையரங்குகளில் பார்ப்பதற்காக ஒன்றரை மணித்தியால நீளமான காட்சிகளைக்
கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இது ஒரு தரமான திரைப்படமாகும். இவ்வாறான
திரைப்படங்களைத் தயாரிக்கும் எந்தவொரு தயாரிப்பாளரும் இதனைத்
திரையிடுவதற்காக சுற்றுலாக்கள் செல்வது வழமையானதாகும்.
கேள்வி: நீங்கள்
உண்மையான, நம்பத்தகுந்த காணொளிப் பதிவுகளைக் கொண்டிருந்தால், ஏன் இவற்றை
ஆதாரமாகக் கொண்டு சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக சமூகம் நடவடிக்கை
எடுக்கவில்லை? எமது பார்வையில் உங்களது பதிவுகள் உண்மையற்றவை என்பது
தெளிவாகிறது.
பதில்: நாங்கள்
மட்டுமல்ல, இந்தப் பதிவுகள் போலியற்றவை என்பதை அது சார்ந்த வல்லுனர்கள்
உறுதிப்படுத்தியுள்ளனர். நாங்கள் இந்தப் பதிவுகளில் சிலவற்றை சுயாதீன
தடயவியல் வல்லுனர்களுக்கு அனுப்பி வைத்தோம். இதனை அவர்கள் நம்பத்தகுந்தவை
என உறுதிப்படுத்தியுள்ளனர். பல தொடர்ச்சியான ஆய்வுகளின் பின்னரே இவை
உண்மையானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கேள்வி: இந்தக் காணொலிப் பதிவுகளின் நம்பகத்தன்மையை ஆராய்ந்தவர்கள் யார்?
பதில்: ஒரு
பிரித்தானிய தடயவியல் நிறுவனம். இதன் பெயரைக் குறிப்பிட அந்த
நிறுவனத்தினர் விரும்பவில்லை. அவர்களது விசாரணைக்காக நாம் பணம்
செலுத்தினோம். இந்தக் காணொலிப் பதிவுகள் 'டிஜிற்றல்' தொழினுட்பத்தில்
எடுக்கப்பட்டவை. இந்தப் பதிவுகள் செயற்கையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதா
என்பதை தடயவியல் வல்லுனர்கள் மீண்டும் மீண்டும் ஆராய்ந்தனர். எந்த வகையான
தொலைபேசிகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை அந்தப் பதிவுகள் எடுக்கப்பட்ட
ஒளியின் திசை மூலம் அறியப்பட்டது.
இறந்த
உடலங்கள் கீழே விழுந்த முறை தொடர்பாகவும் தடயவியல் வல்லுனர்கள்
ஆராய்ந்தனர். இந்தப் பதிவுகள் போலியானவையா என்பதைப் பரிசோதிப்பதற்கு இறந்த
உடலங்களில் இரத்தம் எவ்வாறு பரவியிருந்தது என்பதையும் வல்லுனர்கள்
ஆராய்ந்தனர். ஆனால் இதில் தடயவியல் வல்லுனர்கள் மிகவும் நேர்மையாகச்
செயற்பட்டனர்.
இந்தக்
காட்சிகள் நடிகர்கள் மூலம் எடுக்கப்பட்டவை அல்ல என்பதை அவர்கள்
உறுதிப்படுத்தினர். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையும் பல்வேறு வல்லுனர்கள்
மூலம் இந்தப் பதிவுகளை ஆராய்ந்து உண்மையானவை என்பதை உறுதிப்படுத்தினர்.
இந்தப் பதிவுகள் உண்மையானவை என்பதிலும் நான் தயாரித்தவற்றிலும் நான்
நம்பிக்கையாகவும் உறுதியாகவும் உள்ளேன்.
சிறிலங்காவில்
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், சிறிலங்கா அரசாங்கம் போரை வெற்றி
கொண்டதைப் பாராட்டி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் மீது போர்க்
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சாட்சியங்கள் கிடைக்கப் பெற்ற பின்னர்,
ஐ.நா மனித உரிமைகள் பேரவை சிறிலங்கா அரசாங்கத்திடம் கேள்வி கேட்டது.
பான்
கீ மூனால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவானது எம்மால் தயாரிக்கப்பட்ட
காணொலியைப் பார்வையிட்டதுடன், இது நம்பகமான சாட்சியம் என்பதை ஐ.நாவிடம்
அறிக்கையாக சமர்ப்பித்தது. சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்
இவ்வாறான மாற்றங்கள் மேலும் அதிகரித்தன.
எம்மால்
தயாரிக்கப்பட்ட காணொலி ஆதாரங்கள் மிகவும் முக்கியமானது என்பதால் இவற்றை
உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வல்லுனர் குழுவின்
அறிக்கையில் குறிப்பிட்ட விடயத்தை ஐ.நா மீளாய்வு செய்தது. இது தொடர்பில்
விரிவான அறிக்கை ஒன்றைத் தருமாறு நவி பிள்ளை கோரினார்.
இந்நிலையில்
சனனல் 04 ஆல் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் உலகம் தனது கவனத்தைச்
செலுத்தியுள்ளது. சிறிலங்காவுக்கு எதிராக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
மிகவும் பலமான தீர்மானம் முன்வைக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள்.
கேள்வி: அப்படியாயின்
சிறிலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா
மற்றும் ஏனைய அனைத்துலக அமைப்புக்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன்
சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை? நீங்கள் தயாரித்த திரைப்படத்தை
திரையிடுவதற்கு உங்களுக்கு பலர் அனுமதி வழங்காதது ஏன்? இந்தியாவிற்குள்
நுழைவதற்கு உங்களுக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டது.
பதில்: நாங்கள்
தயாரித்த திரைப்படத்தை வெளியிடுவதைத் தடை செய்த எவரும் வெற்றி பெறவில்லை.
எங்களை எவராலும் தடை செய்ய முடியவில்லை. சிறிலங்கா அரசாங்கம் நாங்கள்
திரைப்படத்தை வெளியிடுவதைத் தடுக்க முயற்சித்தனர். சிறிலங்கா அரசாங்கத்தைத்
தவிர இத்திரைப்படத்தை எவரும் எதிர்க்கவில்லை.
இந்தியாவின்
அரசியல் சூழ்நிலை காரணமாகவே என்னால் அங்கு செல்ல முடியவில்லை. நான்
தமிழ்நாட்டுக்கு ஒருபோதும் செல்லவில்லை. எனது நிகழ்ச்சி நிரல் அந்தச்
சூழலைக் கட்டுப்படுத்தாது. தமிழ்நாட்டுக்கு நான் சென்றுவிடுவேன் என இந்தியா
அச்சம் கொள்வதை நான் உணர்ந்து கொள்கிறேன்.
கேள்வி: சிறிலங்காவில் நீங்கள் பெற்ற அனுபவம் தொடர்பாக பிறிதொரு ஆவணத்தைத் தயாரிக்கவுள்ளீர்களா?
பதில்:
சிறிலங்காவில் நான் தங்கியிருக்கின்ற இக்காலப்பகுதி மிகவும் இறுக்கமானது.
நான் எவரையும் பழிசுமத்தவில்லை. சிறிலங்காவானது மிகவும் நல்ல நாடாகும்.
நான் சிறிலங்காவில் வாழும் மக்களை போர்க் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக
வைத்து பிழையாக எடைபோட விரும்பவில்லை. சிறிலங்கர்களை அவர்களது அதிபரைக்
கொண்டு மதிப்பிட விரும்பவில்லை.
கேள்வி: நீங்கள் மிகவும் வெறுக்கத்தக்கவர் என சிறிலங்கர்கள் கருதுகின்றனர். இது தொடர்பில் நீங்கள் எவ்வாறான கருத்தைக் கொண்டுள்ளீர்கள்?
பதில்: அவ்வாறு
சிறிலங்கர்கள் என்னை வெறுத்திருந்தால் நான் இங்கிருக்க முடியாது. என்னைப்
பற்றி மிகவும் தவறான கருத்துக்கள் மக்களிடம் கூறப்படுவதாலேயே மக்கள் என்னை
வெறுக்கிறார்கள். நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என சிறிலங்கா அரச
ஊடகத்தின் ஊடாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டது. இது மிகவும்
அப்பட்டமான பொய். நான் இதனைக் கண்டிக்கிறேன். நான் ஒரு புலி என சிறிலங்கா
அரச ஊடகங்கள் கூறுகின்றன. நான் இது தொடர்பில் என்ன செய்ய முடியும் என
உண்மையில் எனக்குத் தெரியாது.
நான்
சிறிலங்காத் தொலைக்காட்சிக்கு கருத்துக்களைக் கூறினேன். ஆனால் அவர்கள்
எனது குரலைப் பயன்படுத்தவில்லை. ஆனால் பத்திரிகை விமர்சகர் ஒருவர் நான்
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர் எனக் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான ஒரு
சூழலை நான் எனது வாழ்வில் ஒருபோதும் சந்திக்கவில்லை.
ஏன்
இவ்வாறு நான் குற்றம் சுமத்தப்படுகிறேன்? நான் ஒரு கூடாத ஊடகவியலாளர் என
இந்த மக்கள் கருதுகிறார்களா? இந்த மக்கள் என்னால் முன்வைக்கப்பட்ட
சாட்சியங்களை முற்றுமுழுதாக தட்டிக்கழித்து, நான் ஒரு பொய்யன் எனக்
கூறுகின்றார்கள். எனது வாழ்வை ஆபத்தில் இட்டுள்ளார்கள். இவ்வாறு
செய்தவர்கள் நல்லவர்களா? மன்னிக்கவும், எனக்குப் பித்துப்
பிடித்துவிட்டது.
கேள்வி: கிளிநொச்சிக்கான உங்களது பயணத்திற்கு அனுசரணை வழங்கியது யார்? இது தொடர்பாக நீங்கள் ஊடக அமைச்சிடம் தெரியப்படுத்தினீர்களா?
பதில்: நாங்கள்
விரும்புகின்ற எந்த இடத்திற்கும் நாங்கள் பயணிக்க முடியும் என சிறிலங்கா
அதிபர் கூறியிருந்தார். இதனால் நாங்கள் கிளிநொச்சிக்கான எமது பயணத்தை
மேற்கொள்ளத் தீர்மானித்தோம்.
கேள்வி: குறிப்பாக கிளிநொச்சிக்குச் சென்றதன் காரணம் என்ன?
பதில்: வடக்கு
தொடர்பாக எனக்கு இரு வேறுவிதமான விபரிப்புக்கள் கிடைக்கப் பெற்றன.
'வடக்கில் எல்லாம் சரியாக உள்ளது' என சிறிலங்கா அரசாங்கமும் அதன்
ஆதரவாளர்களும் தெரிவித்தனர். அவர்கள் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய
வீதிகள், பாடசாலைகள் போன்றன தொடர்பாகவும் இங்கு பொருளாதாரம்
முன்னேறுவதாகவும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவும், முன்னாள் விடுதலைப்
புலி உறுப்பினர்கள் அனைவரும் மீள்புனரமைக்கப்பட்டதாகவும் சிறிலங்கா
அரசாங்கம் தெரிவித்தது.
ஆனால்,
தாங்கள் தொடர்ந்தும் சிறிலங்கா இராணுவத்தின் அடக்குமுறைக்குள்
வாழ்வதாகவும், சுதந்திரமின்றி வாழ்வதாகவும், பாலியல் வன்முறைகளுக்கு
உட்படுவதாகவும், தமக்குச் சொந்தமான பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை
சிறிலங்கா இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுள்ளதாகவும் தமிழ்
மக்கள் கூறுகின்றனர். வடக்கு முழுவதிலும் சிறிலங்கா இராணுவத்தினர்
நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வடக்கு நோக்கி சிங்கள விவசாயிகள்
குடிபெயர்வதாகவும் தமிழ் மக்கள் கூறுகின்றனர். ஆகவே உண்மையான ஒரு
ஊடகவியலாளன் என்ன செய்யவேண்டும்? உண்மையான ஊடகவியலாளன் இந்தச் சூழலை நேரில்
சென்று பார்வையிட்டு உண்மையான நிலைப்பாடு எவ்வாறுள்ளது என்பதை
ஆராயவேண்டும். ஆனால் எங்களை அங்கு செல்லக்கூடாது எனத் தடுத்தது யார்?
வடக்கில் எல்லாம் நன்றாக உள்ளது எனக் கூறுபவர்களே எங்களை அங்கு செல்லவிடாது
தடுக்கின்றனர்.
கேள்வி: நீங்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கு முன்னரும் இங்கு வந்த பின்னரும் எத்தகைய மாற்றத்தை உணர்கிறீர்கள்?
பதில்: உண்மையைச் சொல்வதானல் நான் இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வந்துள்ளேன்.
கேள்வி: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் ஊடகவியலாளராக இங்கு வருகை தந்தீர்களா?
பதில்: இல்லை.
நான் என்னை மறைத்து சாதாரண ஒருவராக வந்தேன். நான் இரண்டு ஆண்டுகளுக்கு
முன்னர் இங்கு வந்தபோது ஒரு ஊடகவியலாளனாக வரவில்லை. சிறிலங்காவானது மிகவும்
அழகான நாடு எனவும், இங்கு வாழும் மக்கள் மிகவும் அன்பானவர்கள் எனவும் நான்
அறிந்து கொண்டேன். அதுவே நான் முதன்முதலாக சிறிலங்காவுக்கு வருவதற்கு
என்னைத் தூண்டியது.
ஆனால்
நான் இந்த நாடு ஒரு சுதந்திரமான நாடு என நான் கருதவில்லை. இங்கு
ஊடகங்களுக்கு சுதந்திரமில்லை. இங்கு வாழும் எல்லா மக்களும் சுதந்திரமாக
வாழ்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. இங்கு சிறுபான்மையினர்
மதிக்கப்படவில்லை. சிறிலங்காவில் இது ஒரு பிரச்சினையாக உள்ளது.
கேள்வி: ஏன் சனல் 04 தொலைக்காட்சி சேவையானது சிறிலங்காவுக்கு 17 பேர் கொண்ட குழுவுடன் வந்துள்ளது?
பதில்:
இங்கு எங்களில் எட்டுப் பேர் மட்டுமே உள்ளோம். நாங்கள் பொதுநலவாய
அமைப்பின் உச்சி மாநாடு தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்காகவே
சிறிலங்காவுக்கு வந்தோம். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் பொதுநலவாயத்தின்
தலைமைப் பொறுப்பை வகிக்கவுள்ள நாட்டின் நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக
நாங்கள் இங்கு வந்துள்ளோம். பொதுநலவாயத்தின் விழுமியங்களை மதிக்காத
சிறிலங்கா இதன் உறுப்பு நாடாக இருக்க முடியாது. இதனால் நாங்கள்
சிறிலங்காவில் உள்ள சூழலை ஆராயவேண்டிய தேவையுள்ளது.
கேள்வி: நீங்கள்
தற்போது இறுதியாக இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான புதிய
சாட்சியம் ஒன்றை வெளியிட்டுள்ளீர்கள். நீங்கள் ஏன் பொதுநலவாய அமைப்பின்
உச்சி மாநாடு நடைபெறும் இக்காலப்பகுதியில் இசைப்பிரியா தொடர்பான புதிய
சாட்சியத்தை வெளியிட்டுள்ளீர்கள்?
பதில்: நாங்கள்
இந்த ஆவணத்தை குறிப்பிட்ட காலத்தின் முன்னரே முடித்துவிட்டோம். ஆனால்
இந்தக் காணொலியின் பிரிவுத்திறன் மிகவும் தாழ்வாகக் காணப்பட்டது. இதனால்
இதில் உள்ளது இசைப்பிரியா தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என நாம்
விரும்பினோம். இவரது சகோதரி இக்காணொலியைப் பார்த்து இது இசைப்பிரியா தான்
என்பதை உறுதிப்படுத்தினார்.
நாங்கள்
பொதுநலவாய மாநாட்டிற்காகக் காத்திருக்கவில்லை. ஆனால் இந்த மாநாட்டிற்கு
முன்னர் இதனை வெளியிட வேண்டும் என நான் முயற்சித்தேன். ஊடகவியலாளன் என்ற
வகையில் இது எனது தொழிலாகும்.
கேள்வி: நீங்கள் ஏன் சிறிலங்கா விவகாரத்தை முதன்மைப்படுத்துகிறீர்கள்?
பதில்: நான்
அவ்வாறு செய்யவில்லை. நீங்கள் என்னுடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்
பேசியிருந்தால், நான் ஈராக் தொடர்பாகவும் ஈராக்கில் பிரித்தானியப் படைகளால்
இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பாகவும் கருத்துக் கூறியிருப்பேன்.
கேள்வி: இந்த விசாரணையின் விளைவு என்ன?
பதில்: தற்போது
பிரித்தானியாவில் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. Danny Boy
என்கின்ற போர்க்களத்தில் பிரித்தானிய அரசாங்கத்தால் பல மில்லியன் பவுண்ட்ஸ்
நிதி செலவழிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த
யுத்தகளத்தில் பிரித்தானியப் படைகள் ஈராக்கிய சிறைக்கைதிகளைப் படுகொலை
செய்திருந்தனர். இது தொடர்பான விசாரணை என்னால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தை
அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
கேள்வி: இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்ததற்காக நீங்கள் உங்களது சொந்த மக்களால் வெறுக்கப்படுகிறீர்களா?
பதில்: இல்லை.
நான் எனது சொந்த அரசாங்கத்தின் மீறல்கள், ஈராக்கில் இவர்களால்
முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றன தொடர்பாக பல காணொலிகளைத்
தயாரித்துள்ளேன். சிறிலங்காவில் மக்கள் எமக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்வதைப்
போல, பிரித்தானியர்கள் ஒருபோதும் எம்மை வெறுக்கவில்லை.
கேள்வி: சிறிலங்கா தொடர்பான உங்களது விசாரணையிலிருந்து நீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: இங்கு
மீளிணக்கப்பாடு மற்றும் அரசியற் தீர்வு போன்றன எட்டப்பட வேண்டும். இங்கு
நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு நீங்கள்
முதலில் உண்மையைக் கண்டறிய வேண்டும்.
கேள்வி: நீங்கள் ஏன் சிறிலங்கா அதிகாரிகளை ஒன்றிணைத்து உங்கள் தொடர்பான அவர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை?
பதில்: எம்மால்
தயாரிக்கப்படும் திரைப்படத்தை ஒவ்வொரு தடவையும் திரையிடும் போதும்,
சிறிலங்கா அதிகாரிகள் இது தொடர்பாக கருத்துரைப்பதற்கு
அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் திரைப்படத்தை திரையிடுவதைத் தடுக்க
முயற்சிக்கிறார்கள். அத்துடன் ஜெனீவா மற்றும் அவுஸ்திரேலியாவில் நாங்கள்
திரைப்படத்தை வெளியிட்ட போது சிறிலங்கா அரசாங்க ஆதரவாளர்கள் இதனை எதிர்த்து
ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
தம்மீதான
குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை எனக் கூறுகின்றனர். கற்றுக் கொண்ட
பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது விசாரணையின் போது மீறல்கள்
தொடர்பான அனைத்துக் கேள்விகளையும் கேட்கவில்லை என நான் கூறியுள்ளேன். மேஜர்
ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் முக்கிய கேள்விகள் தொடர்பாக விசாரணை
செய்யப்படவில்லை.
இதேபோன்று
சிறிலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கட்டளை வழங்கியவர்களை
முற்றுமுழுதாக விசாரிக்கவில்லை. ஆனால் சவீந்திர சில்வா எனது கேள்விகளைத்
தவறாக கற்பிதம் செய்து தவறான கருத்தை வெளியிட்டார். எனது கேள்விகள்
வேறுபட்டவையாக இருந்தன. சவீந்திர சில்வா என்னால் கேட்கப்பட்ட கேள்விகளை
விளங்கிக் கொள்ளாதது போன்று நடித்தார்.
கேள்வி: நீங்கள்
இங்கு வருகை தந்துள்ளதை எதிர்த்து மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்
செய்வார்கள் என எமது ஊடக அமைச்சர் கெகலிய றம்புக்வெல தெரிவித்திருந்தார்.
போர்க் குற்றவாளிகளைக் கொண்ட நாடு சிறிலங்கா என நீங்கள்
விபரித்திருந்தீர்கள். ஆகவே இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் நீங்கள்
எதிர்பார்க்கவில்லையா?
பதில்: முதலில், விசாரணை செய்து உண்மையை வெளிப்படுத்தவும். அதுவே எல்லாவற்றையும் சரியாக்கும்.
கேள்வி: நீங்கள் மீண்டும் சிறிலங்காவுக்கு வருவீர்களா?
பதில்: இந்தப் 'பைத்தியங்கள்' எல்லாம் இங்கு இல்லாத போது நான் மீண்டும் சிறிலங்காவுக்கு வர விரும்புகிறேன்.
மொழியாக்கம் : நித்தியபாரதி
நன்றி;புதினப்பலகை
MAGRE SAID REALY!
பதிலளிநீக்குMAGRE SAID REALY!
பதிலளிநீக்குMAGRE SAID REALY!
பதிலளிநீக்குKALUM MAGRE SAID REALY!
பதிலளிநீக்குLTTE IS BETTER THAN SRI LANKA GOVENMENT!