இலங்கையரசு நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்த நவநீதம்பிள்ளை, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் வடுக்கள், காணாமல் போனோர் பற்றிய விபரங்கள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்களுடன் பேச்சு நடத்தவும், நடத்தியும் வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா, நவநீதம்பிள்ளையை தான் திருமணம் செய்யத் தயார் என்று கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை திருமணம் செய்வதற்கு தாம் தயார் என அமைச்சர் மேர்வின் சில்வா கூறியிருப்பதானது, இந்த நாட்டில் நிலவும் அசிங்கத்திற்கு ஓர் அடையாளமாகும்.
மேர்வின் சில்வாவின் குறித்த வார்த்தையையிட்டு இலங்கை மக்கள் தலை குனியும் படியாகிவிட்டது.
அதுமட்டுமன்றி பெண்களை இழிவுபடுத்துகின்ற அளவில் ஓர் அமைச்சர் கதைத்திருப்பதானது இலங்கை ஆட்சியின் பண்பாடு எத்தன்மையில் உள்ளது என்பதற்கு நல்லதொரு சான்றாகும்.
பெண்கள் உயர் பதவி வகிப்பதையிட்டு மனித சமூகம் மகிழ்வடையவேண்டும்.
தாயாக, சகோதரியாகப் பார்க்கின்ற பண்பாடுகள் இருக்கும் போது, நவநீதம்பிள்ளையை திருமணம் செய்வதற்கு நான் தயார் என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறுவாராக இருந்தால், அவரின் அமைச்சில் பணியாற்றுகின்ற பெண்கள், அவருக்கு வாக்களித்த பெண்கள் தொடர்பில் அவரின் மனநிலை எவ்வாறாக இருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
நவநீதம்பிள்ளைக்குக் களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக அமைச்சர் மேர்வின் கையாண்ட சொற்பதம் அமைச்சர் மேர்வினை அசிங்கப்படுத்திவிட்டது.
ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கே இவ்வாறு கூறுகின்ற ஒருவர் தான், இந்த நாட்டின் அமைச்சர் என்றால், நாட்டில் மனித உரிமைமீறல்கள் எப்படி இருக்கும் என்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவைப்பட மாட்டாது என்றே கூறவேண்டும்.
எதுவாயினும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் வார்த்தைப் பிரயோகத்திற்காக இலங்கையரசு நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.
இத்தகைய அசிங்கத்தனமான வார்த்தைப் பிரயோகங்களால் நாட்டிற்கு ஏற்பட்ட அபகீர்த்திக்காக சம்பந்தப்பட்டவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
ஒழுங்கீனமே இந்த நாட்டின் ஒழுக்கம் என்றாகி விட்டால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது உண்மைதான்.
ஆனால் இத்தகைய வார்த்தைகளுக்கு கரகோசம் செய்யப்படுமாயின் இலங்கையின் எதிர்காலம் படுமோசமாக அமையும் என அவதானிகள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக