சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

24 செப்டம்பர், 2013

வட மாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்!

இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் நேற்று யாழ்ப்பாணத்தில் கூடி, விக்னேஸ்வரன் அவர்களை உத்தியோகபூர்வமாக முதலமைச்சராகத் தெரிவு செய்திருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று  நேற்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யபட்ட 28 உறுப்பினர்களும் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திரு. சீ.வி..விக்னேஸ்வரன் அவர்களை வட மாகாண முதலமைச்சராக ஏகமனதாக தெரிவு செய்தார்கள்.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், விநோ நோகராலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த 1987 ம் ஆண்டு இலங்கை இந்திய ஓப்பந்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது.
இதனையடுத்து, 1988 ம் ஆண்டு வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் அந்த மாகாண சபை செயலிழந்து போனது. பின்னர் வடக்கும் கிழக்கும் இரண்டாகப் பிரிக்கப்பட்டன.
ஆயினும் அப்போது உறுதியளிக்கப்பட்ட மாகாண மட்டத்திலான அதிகாரங்களைக் கொண்ட வட மாகாண சபைக்கான தேர்தல் 25 வருடங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக இப்போதுதான் நடந்தேறியிருக்கின்றது.
இந்தத் தேர்தலில் 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி வரலாற்று ரீதியான சாதனையைப் படைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக