தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இந்து குருமார்களிடம் ஆசி பெற சென்றமையை
இந்து கலாச்சார தினைக்கள அதிகாரிகள் தடை செய்தமையை கண்டிப்பதுடன் வட
மாகாண சபைத்தேர்தலில் இந்து மகா சபை தனது ஆதரவை தமிழ் தேசியக்
கூட்டமைப்புக்கு வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளது .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை முதன்மை வேட்பாளர்
உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்துக் குருமார்களிடம் ஆசி பெற
முற்பட்டமையை இந்து கலாசார திணைக்களத்தின் அதிகாரிகள் தடுத்த சம்பவம்
தங்களுக்கு மிகப் பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்து மகா சபை
தெரிவித்துள்ளது .
அத்துடன் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை
முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் இந்து மத நலன்களுக்காக
பாடுபடக்கூடியவர் என்பதால் அவருக்கு தமது ஆதரவை வெளிப்படுத்துவதாகவும்
இந்து மகா சபை தெரிவித்துள்ளது .
சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத்திற்கான கட்டிடமானது அரச நிதியில்
கட்டப்பட்டு இந்து கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள
போதிலும் , ஒரு கட்டிடத்தை ஒரு தரப்பாருக்கு கட்டிக்கொடுக்கும் போது அங்கு
அந்த தரப்பினர் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் . அதேபோல் தான்
இந்துக் குருமார் ஒன்றியத்திற்கு என்று வழங்கப்பட்டுள்ள இந்தக்
கட்டிடத்தில் அவர்கள் தமது மத செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர் .
தென்னிலங்கையில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பௌத்த மத
பீடங்களுக்குச் சென்று ஆசி பெறுகின்றனர் . இதனை எவரும் தடுப்பது இல்லை .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சர்
வேட்பாளரும் அண்மையில் யாழ் . ஆயரிடம் சென்று ஆசி பெற்றிருந்தனர் .
அதேபோன்ற ஆசி பெறும் செயற்பாட்டுக்காகவே இந்துக் குருமார் ஒன்றியத்திற்கும்
சென்றிருந்தனர் . இதை இந்து கலாசார திணைக்களம் தடுத்தமையானது முறையற்ற
செயற்பாடாகும் . இந்தச் செயற்பாடானது இந்து மதத்தையும் மதகுருமாரையும்
அவமதிக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பானது . இந்து மத மேம்பாட்டுக்கா
உருவாக்கப்பட்டுள்ள இந்து கலாசார திணைக்களம் இனிமேலாவது இவ்வாறான
செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாதென்று கேட்டுக்கொள்கின்றோம் .
மேலும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை முதலமைச்சர்
வேட்பாளர் விக்னேஸ்வரன் இந்து மத நலனுக்காக பாடுபட்டுக்கொண்டிருப்பவர்
என்ற வகையில் அவரின் வெற்றியை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு இந்துவின்
கடமையுமாகும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக