இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது
என்பதை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய மதிமுக
சார்பில் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் மன்னார்குடியில்
தொடங்கியது.
தமிழர்களை இனபடுகொலை செய்த இலங்கையில்
நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, இலங்கையை
கொமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், தமிழீழம்
அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த ஆதரவு கொடுக்க வேண்டும், போர் குற்றவாளி
இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி
உரிய தண்டனையை பெற்றுதர முயற்சி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை
வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய மதிமுக, தமிழன் சேவை
மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட செயலாளர்
காளிதாசு, மதிமுக மன்னை ஒன்றிய செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், தமிழன்
சேவை மைய நிறுவனர் வாட்டார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் திருவாரூர்
மாவட்டத்தில் ஒரு லட்சம் தமிழர்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம்
மன்னார்குடியில் தொடங்கியது.
மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின்
தலைவர் வி.அய்யப்பன் முதல் கையெழுத்தினை இட்டு தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக்கழக மன்னை நகர செயலாளர் மணிகண்டன், லாரி
உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் காசங்குளம் பாலு, பொருளாளர் சேரன்குளம்
செந்தில்குமார், கௌரவ தலைவர் ராஜ், எஸ்ஆர்எஸ் நாகேந்திரன், தமிழ்நாடு லாரி
சர்வீஸ் பாலு, சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒரு லட்சம் தமிழர்களிடம் கையொப்பம் பெற்று
இந்திய பிரதமர், இந்திய உள்துறை அமைச்சர், ஐநா சபை, ஜெனிவா நகரத்தில் உள்ள
உலக மனித உரிமை கமிஷன், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமரன்
ஆகியோருக்கு அனுப்பிட திராவிடர் விடுதலைக் கழகம், மதிமுக நிர்வாகிகள்
ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக