ஒரு ஜனநாயக நாட்டில் மரணித்த வீரமறவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதும்
அவர்களுக்கு நினைவாலயம் அமைப்பதும் ஜனநாயக உரிமை . யாழ் . நல்லூரில்
உள்ள கிட்டுப்பூங்காவில் ( சங்கிலியன் சிலைப்பகுதி ) இராணுவ முகாம்
அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என வட மாகாண சபை உறுப்பினர்
பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார் .
கிட்டு பூங்காவை இராணுவம் கையகப்படுத்த எண்ணியுள்ளமை தொடர்பில் அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது . குறித்த
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
" தமிழர்களின் பாரம்பரிய நினைவிடங்களை அழிக்க நினைப்பதையும் நிலத்தை
அபகரிக்க நினைப்பதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது . கிட்டுப்பூங்கா
ஒரு முக்கிய சுற்றுலா மையமாகையால் , அதில் இராணுவ முகாம் அமைப்பதற்கு நாம்
ஒருபோதும் இடமளியோம் .
கிட்டு பூங்காவைப் புனரமைத்து சிறுவர்களுக்கான ஒரு சிறந்த
பொழுதுபோக்கு மையமாக உருவாக்க எண்ணியுள்ளோம் . ஒரு ஜனநாயக நாட்டில்
மரணித்த வீரமறவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதும் அவர்களுக்கு நினைவாலயம்
அமைப்பதும் ஜனநாயக உரிமை .
மண்ணுக்காய் மரணித்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் புனிதர்கள் .
அதைத் தடுக்கின்ற அதிகாரம் எவருக்கும் கிடையாது . ஆனால் , எமது நாட்டில்
ஜனநாயகம் புரையோடிப் போயுள்ளது . தமிழர்களின் வரலாற்றுத் தடயங்களை
இராணுவம் அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்த முயல்வதற்கு மக்கள்
பிரதிநிதிகளாகிய நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் .
எமது வளங்கள் பாதுகாக்கப்பட்டு வரலாறுகள் ஆண்டாண்டு காலத்துக்கும்
பேணப்பட வேண்டும் . இராணுவம் இன அழிப்பை மேற்கொள்வதுடன் எமது இனத்தின்
இருப்பையும் வரலாற்றையும் இல்லாதொழிக்கின்ற நடவடிக்கையினையும்
மேற்கொள்கின்றது .
இவ்வாறான இராணுவத் தலையீடுகளும் நில அபகரிப்புகளும் எமது நல்லெண்ண
விடயங்களைப் பாதிக்கின்றதுடன் இந்தச் செயற்பாடுகள் இடம்பெற நாம்
இடமளிக்கமாட்டோம் " என்றார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக