சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

20 அக்டோபர், 2013

கூட்டமைப்பின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைத்தவிட முடியாது - சித்தார்த்தன்

கூட்டமைப்புக்குள் அங்கம் பெறும் கட்சிகளோடு கலந்தாலோசிக்காமல் ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டதை ஆட்சேபித்தே எமது அதிருப்திகளை தெரிவித்து வந்திருக்கின்றோமே தவிர எச்சந்தர்ப்பத்திலும் எக்காரணங்களுக்காகவும் அதன் ஒற்றுமையை சீர்குலைக்க நாங்கள் காரணமாக இருக்கமாட்டோம்.
என புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்தேறிய இழுபறி நிலை பற்றியும் முரண் சார் நிகழ்வு பற்றியும் விளக்கமளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

அமைச்சர் பதவி தரப்படவில்லை என்பதற்காகவோ எங்களை முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பதற்காகவோ நாங்கள் எந்த காரியங்களையும் செய்யவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் பெற்று அதிக வாக்குகளை நாம் பெற்றிருந்தும் கூட வட மாகாணசபை தேர்தலுக்குப் பின் எடுக்கப்பட்ட ஒரு சில முடிவுகள் எம்மை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட காரணத்தினால் தொடர்ந்தும் இவ்வாறான நிலை வரக்கூடாது என்பதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டோம். 
என்ன காரணத்தையிட்டும் கூட்டமைப்பின் ஒற்றுமையை யாரும் உடைத்துவிட முடியாது என்பதே உண்மை. நடைபெறப் போகின்ற மாகாணசபை ஆட்சியில் எமது ஆதரவு பலம் கொண்டதாகவே இருக்கும்.
கடந்த வெள்ளிக்கிழமை நாங்கள் ஒற்றுமையாகவுள்ளோம் என்பதைக் காட்ட வலிமேற்கு திறப்பு விழாவொன்றில் கலந்துகொண்டுள்ளோம். எதிர்வரும் 22ஆம் திகதி மாகாண சபையின் கட்டிடத்துக்கு பால் காய்ச்சும் வைபவம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி மாகாண சபை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவிருக்கின்றது. இவ்வைபவம் அனைத்திலும் ஒன்றுபட்ட முறையில் நாம் செயற்படவுள்ளோம்.

ஆரம்பத்தில் தமிழ் தேசிக் கூட்டமைப்புக்குள் மூன்று கட்சிகளே இருந்தன. அக்கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆரம்பத்தில் என்னால் உணரமுடிந்தது. இதில் இன்னுமொரு விடயம் என்னவென்றால், கட்சியொன்றுக்கு ஒரு அமைச்சு பதவியை வழங்கிவிட்டு இவரைத்தான் நீங்கள் போட வேண்டுமென வலியுறுத்துவது நியாயமற்றது ஆகும்.
இதன் காரணமாகவே ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் முரண்பாடு உருவாகியது. செல்வம் அடைக்கலநாதனின் பார்வையில் அது சரியாகப் பட்டாலும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் நியாயம் இருக்கவில்லை.
இந்த முரண் நிலைகள் நாங்கள் தனித்தனியாக யோசித்து தீர்மானம் மேற்கொண்டதே தவிர புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து பேசி தீர்மானம் எடுக்கவில்லை என்பதே உண்மை.

40 ஆயிரம் வாக்குகுளை இந்த மாகாண சபைத் தேர்தலில் நான் பெற்றிருந்தேன். மக்கள் பிரதிநிதிகளைத் தான் நாம் முதன்மைப்படுத்த வேண்டுமென கூறப்பட்டு வந்த விடயத்தில் நாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவே கருதுகிறோம்.
முதல் அமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்த அன்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்ஷித்தை கூட்டமைப்பின் சார்பில் சந்திக்கச் சென்றபோது என்னை அழைக்கவுமில்லை. தகவல் தெரிவிக்கவுமில்லை. தங்கள் விருப்பப்படி சென்றிருந்தார்கள்.
நான் அதிக வாக்கு எடுத்திருந்தும் புறக்கணிக்கப்பட்டு விட்டேன். மக்கள் பிரதிநிதிகளையே எல்லா விடயங்களுக்கும் முதன்மைப்படுத்துவோம் என்று கூறி வருபவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கக்கூடாது.
இந்த நிலைகள் தொடரக் கூடாது என்பதை மனங்கொண்டே எனது அதிருப்தியை வெளிப்படுத்த சில விடயங்களை வெளிக்காட்டவேண்டி வந்ததே தவிர எனக்கு அமைச்சர் பதவி தரவில்லையென்றோ எனது கட்சி கவனிக்கப்படவில்லை என்பதற்காகவோ நான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.
எப்படி இருந்த போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை யாரும் குலைத்துவிட முடியாது. குலைத்துவிட நாம் அனுமதிக்கப்போவதில்லை. தலைமைத்துவத்தின் வழிகாட்டலுக்கு அமைய நடந்து கொள்வதில் நாம் ஆர்வமாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக