பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகைதரும் பிரிட்டன்
பிரதமர் டேவிட் கமரூன் வடக்கு மாகாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று நம்பகரமாகத் தெரியவருகிறது .
குறிப்பாக யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , முல்லைத்தீவு ஆகிய
மாவட்டங்களுக்கு அவர் நேரில் பயணங்களை மேற் கொள்வதற்கான ஒழுங்குகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது .
அரசுத் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுநலவாய மாநாடு அடுத்த மாதம் 14
ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறவுள்ளது . இந்த
மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் பிரதமர்
டேவிட் கமரூன் ஆகியோர் இலங்கை வருகின்றனர் .
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ற பின்னர் , இளவரசர் சார்ள்ஸ்
தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினர் கிழக்கு மாகாணத்துக்குப் பயணம்
மேற்கொள்வர் .
அதே போன்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையிலான ஒரு
குழுவினர் வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் . பிரிட்டன்
பிரதமர் வடபகுதிக்கான பயணத்தின் போது யாழ்ப்பாணம் , கிளிநொச்சி ,
முல்லைத்தீவு மாவட்டங்களுக்கே செல்லவுள்ளார் என்று அறிய முடிந்தது .
பிரதமர் பயணம் மேற்கொள்ளவுள்ள இடங்களைத் தீர்மானிப்பதற்காகவும்
பிரதமர் சந்திப்பவர்களைத் தீர்மானிப்பதற்காகவும் , பயண முன்னேற்பாடுகளைக்
கவனிப்பதற்காகவும் பிரிட்டனின் விசேட தூதுக்குழுவினர் வட பகுதிக்கு வந்து
சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை , போரின் பின்னர் வடபகுதிக்கு பயணம் மேற் கொள்ளும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் டேவிட் கமரூன் என்பது குறிப்பிடத்தக்கது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக