இலங்கையில் போர்க்கால இழப்புக்கள் குறித்த பதிவுகளைப்
பொதுமக்களிடம் இருந்து திரட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள
நடவடிக்கைகள் நம்பகமாக இல்லையென்று வடக்கு மக்கள் தெரிவித்துள்ளனர்.
போர்க்காலத்தில், அதுவும் 1982 ஆம் ஆண்டு தொடக்கம்
2009 ஆம் ஆண்டு வரையிலான 27 வருட காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள்,
உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள காயங்கள், அவயவங்களின் இழப்புக்கள்,
சொத்துக்களுக்கு எற்பட்டுள்ள அழிவுகள், விவசாயம் உள்ளிட்ட
தொழில்துறை
மற்றும் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து, திடீரென
அறிவித்து சுமார் இரண்டு வார காலப்பகுதிக்குள் தகவல்களைத் திரட்டுவதற்கு
அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகத்
தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இரண்டு வார காலத்தில் இப்படியான பணியை பூர்த்திசெய்வதில் சிரமங்கள் இருப்பதாக சில ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
காலம் கடந்தாவது போர்க்கால இழப்புக்களைத்
திரட்டுவதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்ற கருத்தும்
தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இத்தகைய தகவல்களைத் திரட்டியதன் பின்னர்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடுகளை வழங்குமா என்ற சந்தேகமும்
எழுப்பப்பட்டிருக்கின்றது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக