இலங்கை நிலவரம் குறித்து
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை வெளியிட்டுள்ள விசாரணை
அறிக்கை உலகத்தமிழர்களின் கோரிக்கைகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக
அமைந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் பா.ம.க நிறுவுநர் ராமதாஸ்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட
அப்பாவித் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த இலங்கைப் படையினரின்
போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள்
குறித்து நேர்மையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கவேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி, கடந்த ஆண்டு மார்ச் மாதம்
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையத்தின் 19ஆவது கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இன்றுவரை இலங்கையில் மனித உரிமைச்
சூழலை மேம்படுத்தவோ அல்லது போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவோ
அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், இலங்கையில் மனித உரிமை
மீறல் தொடருவதை ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவரது அறிக்கையில்
சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இலங்கையில் நெருக்கடிகால நடைமுறைகள்
நீடிப்பது, தமிழர்கள் வாழும் பகுதிகள் இராணுவமயமாக்கப்படுவது,
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது, சட்ட
விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவும், மர்மமான
முறையில் காணாமல் போன தமிழ் அமைப்புகளின் தலைவர்களை கண்டுபிடிக்கவும்
நடவடிக்கைகள் எடுக்கப்படாதது என இலங்கை அரசின் தோல்விகள் அனைத்தையும்
சுட்டிக்காட்டியுள்ள நவநீதம்பிள்ளை, இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற
விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் எதிர்வரும் ஐ.நா.
கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் உலகநாடுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
குறித்து இப்போதே உறுதியாகிவிட்டது. - என்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக