சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

19 பிப்ரவரி, 2013

மனித உரிமைகள் பேரவையின் 'வலுவான பிரேரணை தேவை என தமிழ் கத்தோலிக்க மதகுருமார் ஐநாவிடம் கோரிக்கை!


News Service  

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் கடந்த 19 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையிலும் பார்க்க பொறுப்பு கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களில் நடவடிக்கையுடன் கூடிய வலுவான ஒரு தீர்மானத்தை முன்வைக்குமாறு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான கத்தோலிக்க மதகுருமார் குழு ஒன்று ஐநாவின் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. மன்னார் ஆயர் உட்பட மதகுருமார்களும் அருட்சகோதரிகளுமாக 133 பேர் கையெழுத்திட்டு கடிதம் மூலமாக இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்திருக்கின்றார்கள்.
  
ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட மிகவும் மென்போக்கான பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகளைக் கூட நிறைவேற்றுவதற்குரிய அரசியல் ஆர்வமின்மையையே நாங்கள் அரசாங்கத் தரப்பில் காணக் கூடியதாக இருக்கின்றது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

"இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான விடயங்களைக் கவனிப்பதற்கான ஆணையாளர் ஒருவரை நியமித்தல் போன்ற விடயங்கள் கவனிக்கப்படவில்லை. இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உரியவர்களிடம் கையளித்தல், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள், இறந்தவர்கள், காணாமற்போனவர்களை நினைவுகூருதல், தேசிய மொழிப்பயன்பாடு போன்றவை உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பரிந்துரைகள் மீறப்பட்டிருப்பதையும் நேரில் நாங்கள் கண்டு வருகின்றோம்" என்றும் கத்தோலிக்க மதகுருமார்கள் தமது கடிதத்தில் கூறியிருக்கின்றார்கள்.

"கடந்த ஆண்டில், அமைதியான வழியில் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள் அல்லது அரசுக்கு சவால் விடுத்தவர்கள், ஐ.நாவுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள்கூட, சிறிலங்கா அமைச்சர்கள், அதிகாரிகள், இராணுவத்தினர், காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர். விசாரிக்கப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டுள்ளனர், அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட எங்களில் சில மதகுருமார், தாம் பழிவாங்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக இந்தக் கடிதத்தில் கையெழுத்திட முன்வரவில்லை" என்றும் அந்தக் கடிதம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், காணாமற்போயும் உள்ள நிலையில், தமிழ் மக்களையும் சமூகத்தையும் அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளாக, சமூக, கலாசார, மத, மொழி, நிலஉரிமைகள் - ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் போருக்கு முன்னரும், போரின் போதும், போருக்குப் பின்னரும், அடக்கப்படுவதை தாம் உணர்ந்திருப்பதாகவும் மதகுருமார் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக