பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்கும் வரை அரசு வட மாகாணசபைத் தேர்தலை
நடத்தக்கூடாது என வலியுறுத்தியும், “13′ விடயத்தில் இந்தியாவின்
தலையீட்டுக்கு எதிராகவும் சிங்கள மக்களை அணிதிரட்டி, கொழும்பில் பெரும்
போராட்டத்தை முன்னெடுப்பதற்குச் சிங்கள தேசியவாத அமைப்புகளின் ஒன்றியம்
தீர்மானித்துள்ளது.
இவ்விடயம் குறித்து ஆராய்வதற்கென மேற்படி ஒன்றியத்தின் முக்கிய
கூட்டமொன்று இன்று ஞாயிறு மாலை இடம்பெறவுள்ளது என்றும், இதன்போது
ஆர்ப்பாட்டத்துக்குரிய திகதி நிர்ணயிக்கப்படும் என்றும் அறிய முடிகின்றது.
இந்தத் தகவலை நேற்று உறுதிப்படுத்திய சிங்கள தேசிய அமைப்புகள்
ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர்
கலாநிதி குணதாச அமரசேகர, அநேகமாக நாளை திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம்
முன்னெடுக்கப்படலாம் என்றும் கூறினார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பிரிவினைவாத
அதிகாரங்களுக்கு எதிராகத் தலைநகரில் நடத்தப்படவுள்ள போராட்டத்தில்
கலந்துகொள்ளுமாறு சிங்கள மக்களுக்கு மேற்படி பௌத்த ஒன்றியம் அறைகூவல்
விடுத்துள்ள அதேவேளை, வடமாகாண சபைத் தேர்தலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
செய்துள்ள சிங்கள தேசியக் கூட்டமைப்பும் இதில் கலந்துகொள்ளும் எனத்
தெரியவருகிறது.
அத்துடன், தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து
சிங்கள பௌத்த அமைப்புகளுக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமது
அங்கத்தவர்களுடன் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது
என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன் 13 ஆவது திருத்தத்திலிருந்து பொலிஸ்,
காணி அதிகாரங்களை நீக்கவேண்டும்,’ இவ்விடயத்தில் இந்தியாவின்
தலையீட்டுக்குக் கடும் எதிர்ப்பு’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள குறித்த
ஆர்ப்பாட்டத்தில் கடும்போக்குடைய அமைச்சர்கள் சிலரும் கலந்துகொள்வார்கள்
என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து சிங்கள பௌத்த
அமைப்புகளுக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமது அங்கத்தவர்களுடன்
கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக