சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

13 ஜூலை, 2013

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை: கெலம் மெக்ரே(காணொளி இணைப்பு)!

21 ஆம் நூற்றாண்டின் மோசமான போர்குற்றமாக வர்ணிக்கப்படும், இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் கொடூரங்களை உலகுக்கு அம்பலப்படுத்தி பிரபலமானவர் கெலம் மெக்ரே.

அவரது கில்லிங் ஃபீல்ட்ஸ் ஆவணப் படம் உலகம் முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரில் அப்பாவி பொதுமக்கள் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்திய வன்முறைகள் மற்றும் அத்துமீறல்களை பதிவு செய்தவர்.

புதிய தலைமுறைக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், சர்வதேச அளவிலான சுயேச்சையான விசாரணை நடத்த, சர்வதேச சமூகம் தயக்கம் காண்பித்து வரும் நிலையில் தனது ஆவணப்படம் எதிர்காலத்தில் முக்கிய சான்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.calum mecra
இலங்கை அரசு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதில் உலக நாடுகளுக்கும் பங்குண்டு என்று கூறும் மெக்ரே, உலகின் மற்றபகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் குரல் கொடுத்த போதும், உலக நாடுகள் செவி சாய்க்கவில்லை என்கிறார்.

இறுதிப் போரில் புலிகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும், மறுபுறம் இலங்கை அரசு மிகத் தந்திரமாக செயல்பட்டதாகவும் மெக்ரே கூறினார்.

மேலும், நம்பவே முடியாத அளவில் எதிர், எதிர் நாடுகளின் ஆதரவைப் பெற்ற இலங்கை, இந்தியா-பாகிஸ்தான், அமெரிக்கா-சீனா, இஸ்ரேல்-ஈரான் நாடுகளின் கூட்டுடன் போரை முன்னெடுத்துச் சென்றதாகவும், இந்த நாடுகளின் ஆதரவுடன் தான் அங்கே கொடூரமான படுகொலைகள் நடந்தன என்றும் கெலம் மெக்ரே நம்மிடம் தெரிவித்தார்.

கூட்டணி  அமைத்து படுகொலை

இலங்கை அரசு இன்னமும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டும் கெலம் மெக்ரே, நீதித்துறை சுயேச்சையாக செயல்படும் நிலை இல்லை என்று விமர்சிக்கிறார்.

இதுவரை இழந்திருந்த அதிகாரத்தை எப்படியாவது தக்கவைக்க அங்குள்ள அரசு செயல்பட்டு வருவதாகவும், அதற்காக அனைத்து விதமான அடக்குமுறைகளும் அங்கு செயல்படுத்தப்படுவதாகவும் மெக்ரே தெரிவித்தார்.

சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள்

சிங்களமயமாதல் தொடர்ந்து நடந்து வரும் இலங்கையில், ஒரு வகையான பாசிசப்போக்கு அங்கு நிலவுகிறது என்றார்.

மேலும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மத்தியில் அச்ச உணர்வு தூண்டப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மெக்ரே, நீதித்துறை, பத்திரிக்கைத் துறை மீதான அத்துமீறல்களும் அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டார்.

கொழும்பில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க தமக்கு இலங்கையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கெலம் மெக்ரே, மனித உரிமைகளை அடிப்படை நோக்கமாக கொண்ட காமன்வெல்த்தின் லட்சியத்திற்கே இலங்கை நாடு எதிராக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

காமன்வெல்த்தின் நோக்கம் சிதைகிறது

நடைபெற்ற குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்கும் பெருந்தன்மை கூட இல்லாத இலங்கையில், காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதன் மூலம் காமன்வெல்த் அமைப்பே கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மெக்ரே குற்றம்சாட்டினார்.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு காமன்வெல்த்தின் தலைவராக இலங்கை தலைவர்கள் பதவி வகிக்க உள்ளனர். இருப்பினும் இந்த மாநாடு மூலமாக இலங்கை போர்க்குற்றங்கள் மீது உலகின் கவனம் குவியும் என்றார் மெக்ரே.

எனினும், காமன்வெல்த் மாநாட்டின் மூலம் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையை அனுமதிக்க இலங்கை அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கலாம் என்பது சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஆனால், காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் தலைவராக ராஜபக்சே அடுத்த இரண்டு ஆண்டுகள் பதவி வகிக்கவுள்ள நிலையில் இலங்கை சர்வதேச விசாரணை நடத்துவதற்கு வலியுறுத்தப்படுமா என்பதும் கெலம் மெக்ரேவின் ஆதங்கமாக உள்ளது.

காணொளி: கெலம் மெக்ரே பேட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக