எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கில் இருந்து சிறிலங்காப் படையினரோ
அவர்களின் முகாம்களோ விலக்கிக் கொள்ளப்படமாட்டாது என்று ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 23வது
பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர்,
“ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது.
வடக்கில் இருந்து சிறிலங்காப் படையினரை வெளியேற்ற முன்வைக்கப்படும் யோசனை நடைமுறைச்சாத்தியமற்றது. இந்த யோசனைகள் எங்கிருந்து வருகின்றன என்று நாம் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வேண்டும். வடக்கு, கிழக்கிலும், வெளிநாடுகளிலும் உள்ள மக்கள் விடுதலைப் புலிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறையாகவே,
வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரும் யோசனைகள் அரசாங்கத்துக்கு
முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இராணுவ முகாம்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உள்ளன. அம்பாந்தோட்டையில் உள்ளன. மொனராகலயிலும் இருக்கின்றன. வடக்கு, கிழக்கில் உள்ள சிறிலங்காப் படையினரின் பிரசன்னத்தை அகற்றுவதன் மூலம், தமிழ்மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும்?
நாட்டைப் பிரிக்க முப்பது ஆண்டுகளாக முயற்சித்த தீவிரவாத தலைவர்கள், இப்போது அதற்கு ஜனநாயக வழிமுறைகளை கையில் எடுத்துள்ளனர். தமிழ்மக்கள் இந்தச் சூழ்நிலையை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முப்பது ஆண்டுகளாக எல்லா சமூகங்களினதும் சுதந்திரத்தை பறித்த கொடூரமான
தீவிரவாதி மரணமான, முள்ளிவாய்க்காலை நினைவுச் சின்னமாக்க சில சக்திகள்
கடும் முயற்சி எடுக்கின்றன. இத்தகைய சக்திகளின் முயற்சிகள், அமைதியை விரும்பும் மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற, ஜெயசிறி மகாபோதி, தலதா மாளிகை,
ஏனைய பல வழிபாட்டு இடங்கள் மீது தாக்குதல்களை நடத்திய தீவிரவாதி மரணமான
இடம்தான் வெள்ளமுள்ளிவாய்க்கால். தமிழ்த் தலைவர்களின் பிரிவினைவாதத்தினால் ஏற்பட்ட அழிவுகளின் பாடங்களை எல்லா சமூகங்களும் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிரிவினைவாதத்தை தோற்கடிக்க புதிய அணுகுமுறையை சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடித்தோம். தீவிரவாதத்தின் வேர்களை அழிக்க, வடக்கு,கிழக்கு உள்ளிட்ட நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டோம்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பாக உள்ள பாதுகாப்புப் படையினர் இந்த செயல்முறையில் பங்கேற்பதற்கு உரிமை உள்ளது. வடக்கு,கிழக்கிலும் அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டுள்ள போதிலும்,
அங்குள்ள மக்களின் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசாங்கம் சிறியளவிலேயே பணிகளை
மேற்கொண்டுள்ளதாக சில சக்திகள் குற்றம்சுமத்துகின்றன. சிறிலங்கா படையினரை சிங்கள் இராணுவம் என்று கூறி, தமிழ்ச் சமூகத்தினரை அதில் இணையவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்தனர். இன்று பாதுகாப்புப் படைகளில், சிவில் பாதுகாப்பு படையில், காவல்துறையில்
அதிகளவான வடக்கு கிழக்கு மக்கள் எந்த சிக்கலுமின்றி, இணைந்து
கொண்டுள்ளனர். போர் நடந்த காலங்களில் வடக்கில் பணியாற்றிய, ஐ.நா முகவர் அமைப்புகளும்,
அரச்சார்பற்ற நிறுவனங்களுமே அங்கிருந்த நிலைமைக்கு சாட்சியாக உள்ளன. முகமாலையில் இருந்து வடக்கு,கிழக்கின் மூன்றில் இரண்டு பகுதியை விடுதலைப் புலிகள் தமது ஆட்சியில் வைத்திருந்தனர். இப்போது வடக்கு கிழக்கில் அமைதிய நிலவுகிறது, தேர்தல்களும் நடத்தப்பட்டுள்ளன. வடக்கில் நடந்த தேர்தலைக் கண்காணிக்க வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள்,
பாதுகாப்புப் படையினர் ஒழுக்கத்துடன் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளனர்.”
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக