கேரளாவைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல்,
‘யூடியூபில்’ வெளியானதால் சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து
உள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் சந்திரலேகா அடூர்(23), குடும்பத்தில் நிலவிய
வறுமை காரணமாக சந்திரலேகாவால் உயர் கல்வி கற்க முடியவில்லை. இவருக்கு இளம்
வயதிலேயே நல்ல குரல் வளம் உண்டு. ஆனாலும் முறைப்படி சங்கீதம் கற்கும்
அளவிற்கு இவருக்கு வசதி இல்லை. இதனால், பள்ளியில் நடக்கும் பாட்டுப்
போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன்,
இவருக்கு திருமணம் நடந்தது.
கடந்தாண்டு, தன் குழந்தையை தூங்க வைப்பதற்காக பழைய மலையாள சினிமாவில்
இடம்பெற்ற தாலாட்டு பாடலை பாடினார். குழந்தையை கையில் தூக்கி வைத்தபடி அவர்
பாடியதை குடும்ப நண்பர் ஒருவர், வீடியோவில் பதிவு செய்தார். மூன்று
நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோ கடந்த மாதம், ‘யூடியூபில்’ வெளியானது.
ஒரே மாதத்தில் ஏழு லட்சம் பேர் பார்க்கும் அளவிற்கு இந்த வீடியோ
பிரபலமானது.
சந்திரலேகா இனிமையான குரலில் பாடுவதை பார்த்த மலையாள சினிமா இயக்குனர்கள்
இப்போது தங்கள் படத்தில் அவரை பாட வைப்பதற்கு அவரின் வீட்டு வாசலில்
வரிசையில் நிற்கின்றனர். மலையாள இசையமைப்பாளர் டேவிட் ஜான், தான்
இசையமைக்கும் புதிய படத்திற்கு, பிரபல பின்னணி பாடகி, ஸ்ரேயா கோஷலை பாட
வைக்க திட்டமிட்டிருந்தார். சந்திரலேகாவின் பாடலை, ‘யூடியூபில்’ பார்த்த
பின் தன் முடிவை மாற்றி அவரையே தன் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.
மேலும் சில இசையமைப்பாளர்களும், சந்திரலேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பிரபல பின்னணி பாடகி சித்ரா, போனில் தொடர்பு கொண்டு, சந்திரலேகாவை
பாராட்டியுள்ளார். கேரள முதல்வர் உம்மன் சாண்டியும், பாராட்டியுள்ளார்.
‘யூடியூபால்’ பிரபலமடைந்துள்ள சந்திரலேகாவுக்கு, எந்த ஒரு சமூக வலைத்
தளத்திலும் கணக்கு இல்லை; மின்னஞ்சல் முகவரியும் இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக