இலங்கையில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது
என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .
இலங்கையில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டினை இந்தியா
முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற
பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில் ,
2009 ஆம் ஆண்டு , இலங்கை உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த
நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர்
விதிமுறைகளை முற்றிலும் மீறி , லட்சக்கணக்கான அப்பாவி இலங்கைத் தமிழர்களை
கொன்று குவித்து ஒரு இனப் படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது .
இலங்கை அரசின் இந்த இனப் படுகொலையை ஈவு இரக்கமற்ற இழி செயலை
மனிதாபிமானமற்ற தன்மையை , மனிதநேயமற்ற நடவடிக்கையையும் , இலங்கை
தமிழர்களைஅழிக்க இந்திய அரசு ஆயுதங்கள் வழங்கியது மற்றும் பயிற்சிகள்
அளித்த நடவடிக்கையையும் நான் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து
வந்திருக்கிறேன் .
இலங்கை அரசின் , அராஜகச் செயலைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள
அரசியல் கட்சிகள் , மாணவ , மாணவியர் , ஆசிரியர்கள் , வழக்கறிஞர்கள் , கலைத்
துறையினர் என அனைத்துத் தரப்பினரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும்
வகையில் , ஆர்ப்பாட்டங்கள் , ஊர்வலங்கள் , உண்ணாவிரதம் என பல்வேறு
போராட்டங்களை நடத்தினர் .
இலங்கை நாட்டிற்கு எதிராக உலகம் முழுவதிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன .
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு தனது ஆய்வில் ,
பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது ,
மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும் , மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை
வீசியது , மனிதாபிமான முறையில் , செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது ,
உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைச்
சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக் கூடியவர்கள் உட்பட இந்தச் சண்டையில்
பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை
நிகழ்த்தியது , இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட
போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை
நிகழ்த்தியது உள்பட பல்வேறு கடுமையான குற்றங்களை இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தது .
இந்தச் சூழ்நிலையில் 2011 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக தமிழகத்தின்
முதலமைச்சராக பொறுப்பேற்ற நான் , அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது ஈவு
இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று
பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்
எனவும் , இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் , தங்களது சொந்த
இடங்களுக்கு திரும்பி சிங்களவர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும்
வரையில் , அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில் , மற்ற
நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தினை 8.6.2011 அன்று
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்தேன் .
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் இந்த மாமன்றத்தில் ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டது .ஆனால் , இந்தத் தீர்மானத்தின் மீது இது நாள் வரை
இந்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை .இதனைத் தொடர்ந்து இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி
அளிக்கவும் , சிங்களர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் கலந்து
கொள்ளவும் , மத்திய அரசு அனுமதி வழங்கியது .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு இலங்கை இராணுவ வீரர்களுக்கு ,
இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று நான் பாரதப்
பிரதமருக்கு கடிதங்கள் எழுதினேன் . இதன் விளைவாக , தமிழ்நாட்டில் இலங்கை
இராணுவ வீரர்கள் பயிற்சி பெறுவது ரத்து செய்யப்பட்டது இருப்பினும் , இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்களுக்குத் தேவையான
மறுவாழ்வு பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்றும் , தமிழர்கள் இரண்டாம் தர
குடிமக்களாக கருதப்படுவது தொடர்கிறது என்றும் தகவல்கள் வரப் பெற்றன . இது
மட்டுமல்லாமல் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து புதிய
ஆதாரங்களை ஊடகங்கள் வெளியிட்டன . இதன் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் நாடே
கொதித்தது .
இதனைத் தொடர்ந்து , 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை
நாட்டில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டினை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான
முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும் , இலங்கையில் நடைபெறும்
இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்து
25.3.2013 அன்றே கடிதம் வாயிலாக , மாண்புமிகு பாரதப் பிரதமரை நான் கேட்டுக்
கொண்டேன் .
இது மட்டுமல்லாமல் 27.3.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ,
இலங்கை நாட்டை " நட்பு நாடு " என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்
கொள்ள வேண்டும் என்றும் , இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்
படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான , நியாயமான
சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும் , இந்த சர்வதேச விசாரணையின்
அடிப்படையில் போர்க் குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு
நிறுத்தப்பட்டு , அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும் , தமிழர்கள்
மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது
பொருளாதாரத் தடையை விதித்திடவும் , ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக்
கருத்தில் கொண்டு " தனி ஈழம் " குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும் ,
இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும்
பொது வாக்கெடுப்பு நடத்திடவும் , ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்
குழுவில் தீர்மானத்தினைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும்
அரசினர் தீர்மானத்தினை நான் முன்மொழிந்தேன் . அது இந்த மாமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது . இதன் மீதும் மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையையும்
எடுக்கவில்லை .
இந்தச் சூழ்நிலையில் , தமிழக மக்களின் உணர்வுகள் உட்பட , அனைத்து
காரணிகளையும் பரிசீலித்து , இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில்
தான் கலந்து கொள்வது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று பாரதப்
பிரதமர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன .இந்த கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக
மக்கள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில் , பிரதமர் தன்னுடைய பங்கேற்பு பற்றி
மட்டும் கருத்து தெரிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை
அளித்துள்ளது .
கொமன்வெல்த் நாடுகளின் தலைவரான இரண்டாம் ராணி எலிசபெத் அவர்களால்
கொமன்வெல்த் நாளான 11.3.2013 அன்று கையெழுத்திடப்பட்ட கொமன்வெல்த்
சாசனத்தில் , மனித உரிமைகள் என்ற தலைப்பின் கீழ் , " நாங்கள் மனித உரிமைகள்
மற்றும் பிற தொடர்புடைய மனித உரிமைகள் உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச
வாசித்தல் பிரகடனம் கடமைப்பட்டுள்ளோம் . நாம் சமத்துவத்தை உறுதி மற்றும்
அமைதியான , தான் மற்றும் நிலையான சங்கங்கள் அடித்தளம் என எந்த
அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் அனைத்து வளர்ச்சி உரிமை உட்பட சிவில் ,
அரசியல், பொருளாதார , சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் பாதுகாப்பு மற்றும்
ஊக்குவிப்புக்கான மரியாதை . நாம் , இந்த உரிமைகளை உலகளாவிய , பிரிக்கப்பட
வேண்டும் என்பதை நினைவில் ஒன்றையொன்று சார்ந்துள்ளது என்றும், இடை மற்றும்
தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்படுத்தப்பட முடியாது . "
" நாங்கள் implacably பாலினம் வேரூன்றி என்பதை பாகுபாடு அனைத்து
வகையான எதிர்ப்பு , இனம் , நிறம் , நம்பிக்கை, அரசியல் நம்பிக்கை அல்லது
வேறு காரணங்கள் . " என்று கூறியுள்ளார் .
அதாவது , மனித உரிமைகள் குறித்த பொதுவான பிரகடனம் , இதர தொடர்புடைய
மனித உரிமைகள் குறித்த உடன்பாடுகள் மற்றும் இதர சர்வதேச ஆவணங்கள் ஆகியவற்றை
பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் , அமைதி , நியாயம் மற்றும்
நிலையான சமூகங்கள் ஆகியவற்றின் அடிப்படையாக விளங்கும் வளர்ச்சி உரிமை உள்பட
சமூக , அரசியல் , பொருளாதார மற்றும் கலாச்சார சம உரிமைகளை பாதுகாக்கவும் ,
மேம்படுத்தவும் வழிவகுக்கும் சம உரிமை மற்றும் , கண்ணியத்தை எவ்வித
பாகுபாடுமின்றி அனைவருக்கும் வழங்கவும் உறுதி பூணுகிறோம் என்றும் , இந்த
உரிமைகள் அனைத்தும் பொதுவானவை , பிரிக்க முடியாதவை , ஒன்றுக்கொன்று
சார்புடையவை , ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் , இதில் சிலவற்றை
மட்டும் தெரிந்தெடுத்து செயல்படுத்த முடியாது என்றும் , கொமன்வெல்த்
சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் , பாலினம் , இனம் , நிறம் , மதம் , அரசியல் நம்பிக்கை , அல்லது
வேறு காரணங்களுக்காக ஏற்படுத்தப்படும் வேறுபாடுகளை கடுமையாக
எதிர்க்கிறோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது . ஆனால் , இந்தக்
கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணாக இலங்கை அரசு
செயல்பட்டு வருகிறது . கொமன்வெல்த் நாடுகளின் முக்கியமான கொள்கைகளையும் , கோட்பாடுகளையும்
நிலைநிறுத்த முன்வராத இலங்கை நாட்டில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில்
தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கனடா நாட்டு பிரதமர் அறிக்கை
விடுத்துள்ளார் .அந்த அறிக்கையில் கொமன்வெல்த் கூட்டமைப்பு தொடர்ந்து உகந்த வகையில்
திகழ வேண்டுமென்றால் சுதந்திரம் , ஜனநாயகம் மற்றும் மனித கண்ணியத்தை
மதித்தல் போன்ற அடிப்படைக் கொள்கைகளின் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட்ட
கொமன்வெல்த் அமைப்பு அவற்றை நிலைநிறுத்த வேண்டும் என்று கனடா நம்புகிறது .
கனடா நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் கொமன்வெல்த் நாடுகளின்
இந்த முக்கியக் கொள்கைகளை நிலைநிறுத்த இலங்கை அரசு தவறிவிட்டதால் , கனடா
நாட்டு பிரதமர் என்ற முறையில் இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த்
மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து இருக்கிறார் .
அதாவது , " கனடா பொதுநலவாய தொடர்புடைய இருக்க வேண்டும் என்றால் ,
அது சுதந்திரம் , ஜனநாயகம் மற்றும் காமன்வெல்த் கட்டப்பட்ட மீது மிகவும்
அடித்தளத்தை கொண்ட மனித கண்ணியம் , மரியாதை அடிப்படை கொள்கைகளை
பாதுகாப்பு நிற்க வேண்டும் என்று நம்புகிறது . இது தெளிவாக இருக்கிறது
என்று இலங்கை இலங்கை அரசு கனடா மூலம் மனதிற்கு அவை காமன்வெல்த் மைய
மதிப்புகள் நிலைநிறுத்த முடியவில்லை. எனினும் , கனடா பிரதமர் என , நான்
கொழும்பு , இலங்கை அரசு சந்திப்பு 2013 காமன்வெல்த் தலைவர்கள்
கலந்துகொள்ள மாட்டோம் " என்று கனடா நாட்டு பிரதமர் அறிக்கை
விடுத்திருக்கிறார் .
அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சரின் நாடாளுமன்றச் செயலர்
பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . தமிழர்கள் மிகக் குறைவாக
வசிக்கும் கனடா நாடே இது போன்றதொரு முடிவை எடுத்து பெயரளவில் ஒருவரை
அனுப்பவுள்ள சூழ்நிலையில் , எட்டு கோடி தமிழர்கள் வசிக்கும் இந்தியா இந்த
மாநாட்டில் பெயரளவிலும் கலந்து கொள்ளாது என்னும் தீர்க்கமான முடிவை
இன்னமும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது . தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய
அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது .
இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும்
கொமன்வெல்த் மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும் ,
பெயரளவிற்குக் கூட ஒருவரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்றும்
தெரிவித்து , இது போன்ற நடவடிக்கை இலங்கைத் தமிழர்கள் மீது நியாயமான
அணுகுமுறையை இலங்கை அரசு எடுக்க வழிவகுக்கும் என்றும் கோடிட்டுக்காட்டி
ஒரு விரிவான கடிதத்தினை நான் பாரதப் பிரதமருக்கு 17.10.2013 அன்று
எழுதியுள்ளேன் .
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இதே கோரிக்கையினை
வலியுறுத்தி வருகின்றன . எனினும் , மத்திய அரசு இந்தப் பிரச்சினை தொடர்பாக
ஒரு திடமான , தீர்க்கமான முடிவை இன்னமும் எடுக்கவில்லை . ஒட்டுமொத்த
தமிழக மக்களின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும் , தமிழக
மக்களின் உணர்வுகளைத் , தெரிவிக்கும் வகையிலும் , கீழ்க்காணும்
தீர்மானத்தினை முன்மொழிகிறேன் .
தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும் , உணர்வுகளுக்கும்
மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும்
கொமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும்
; பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த
மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் ; இது குறித்த இந்தியாவின்
முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் ;
இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும் , சிங்களவர்களுக்கு இணையாகவும் வாழ
இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை கொமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து
இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்
என்றும் இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக்
கேட்டுக் கொள்கிறது "
என்னும் தீர்மானத்தினை முன்மொழிகிறேன் .
என்னால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தினை ஒரு மனதாக
நிறைவேற்றித் தருமாறு பேரவைத் தலைவர் வாயிலாக உறுப்பினர்களை கேட்டுக்
கொள்கிறேன் " என்றார் .
இதைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து பேசினர் . இதையடுத்து , தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக