இசைப்பிரியா கொலை தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் .
வெறுமனே இராணுவ அறிக்கையை ஆதாரம் காட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது
என்று நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண
தெரிவித்துள்ளார் .
இலங்கையில் யுத்த குற்றங்கள் நடந்தமைக்கு இந்தியாவும் பொறுப்பாகும் .
பல்லாயிரக்கணக்கிலான தமிழர்களை கொன்றதில் இந்தியாவிற்கும் தண்டனை
கொடுத்தாக வேண்டும் எனவும் அவர் கூறினார் .
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ,
இலங்கையில் நடந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை
மேற்கொள்வதில் அரசாங்கம் கண்மூடித்தனமாகவே செயற்பட்டு வருகின்றது .
இசைப்பிரியா மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு
இருக்கும் அக்கறை இலங்கை அரசாங்கத்திற்கில்லை என்பதே உண்மை . அரசாங்கம்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில்
குறிப்பிட்ட எதையும் இன்றுவரை நடைமுறைப்படுத்தாதுள்ளது . மக்களின் நலன்களை
பற்றியோ யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலோ
அரசாங்கம் அக்கறை கொண்டிருந்தால் இன்று வடக்கு மக்களுக்கு நியாயமானதொரு
தீர்வு கிடைத்திருக்கும் .
யுத்த குற்றங்கள் தொடர்பில் இலங்கை இராணுவம் வெளியிடும் அறிக்கைகளை
மாத்திரம் வைத்துக் கொண்டு அரசாங்கம் ஒரு பக்க அறிக்கையினை மட்டும்
வெளியிடுவது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது . நாம் விடுதலைப்
புலிகளுக்காகவோ பிரபாகரனுக்காகவோ குரல் கொடுக்கவில்லை . நாம்
தமிழர்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் மட்டுமே குரல்
கொடுக்கின்றோம் .
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பில் இந்தியாவும்
பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் . சோனியாகாந்தி யுத்த கால கட்டத்தில்
இலங்கை அரசாங்கத்தை தூண்டி விட்டவர் . இன்று அவர்கள் வாய் மூடி
செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் அவர்கள் செய்த குற்றங்கள் சரியென்றாகி
விடாது .
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதைப் போல்
இந்தியா செய்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் வேண்டும் .
பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தமைக்கும்
வடக்கை மயானமாக மாற்றியமைக்கும் முதலில் இந்தியாவிற்கே தண்டனை கொடுக்க
வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக