சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

12 டிசம்பர், 2013

இலங்கை இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

 
ஈழத்தில் நடந்தது இனப் படுகொலைதான் என ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது.

இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசு நடத்தியது ‘இனப்படுகொலைதான் (Genocide)’ என்று ஜெர்மன் நாட்டில் ப்ரமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் 2013 டிசம்பர் 10ம் தேதி அன்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
2010 ஆண்டு ஜனவரி 14, 16 தேதிகளில் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில், சிங்கள அரசாங்கம் நடத்திய போர் நடவடிக்கை குறித்து, மக்களுக்கான நிரந்தரத் தீர்ப்பாயத்தின் முதல் அமர்வு நடைபெற்றது.
அந்த அமர்வில், இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் விசாரணை நீதிபதிகளில் ஒருவராக பங்கேற்றார். அந்த முதல் அமர்வில் சிங்கள அரசாங்கம் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற இரு அம்சங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு அடுத்த அமர்வில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 2013 டிசம்பர் 7, 8, 9,10 தேதிகளில் ஜெர்மனியின் ப்ரமன் நகரில் மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வு விசாரணை நடைபெற்றது.
சிங்கள அரசு புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று கூறிக்கொண்டு, இலட்சக் கணக்கான தமிழர்களை குழந்தைகள், பெண்கள், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் என அனைவரையும் படுகொலை செய்ததால், கொடுந்துயரத்துக்கு ஆளான ஈழத் தமிழர்கள் நேரடி சாட்சியங்களை பிரமாண வாக்குமூலங்கள் மூலம் மக்கள் தீர்ப்பாயத்தில் பதிவு செய்தனர்.
இனக்கொலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் மனித உரிமை ஆர்வலர்கள், அனைத்துலக சட்ட வல்லுநர்கள், களப் பணியாளர்கள், ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்கள் ஆகியோரின் கருத்துகளையும் தீர்ப்பாயம் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
தமிழகத்திலிருந்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான திருமுருகன் காந்தியும், உமரும் இதுகுறித்த அறிக்கையை தீர்ப்பாயத்திடம் தந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின், நான்காம் நாளான டிசம்பர் 10 ஆம் தேதி அன்று மக்கள் தீர்ப்பாயம் தனது தீர்ப்பை வெளியிட்டது.
(1) ஈழத் தமிழர்களை தனித் தனியாக கொலை செய்யாமல், தமிழர் இனம் என்ற அடிப்படையில் அந்த சமூகத்தின் அடையாளமே இல்லாமல் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை அரசு படுகொலையை நடத்தியுள்ளது.
(2) புலிகளோடு சிங்கள அரசு நடத்திய யுத்தத்துக்கு முன்பாகவே, நீண்ட காலமாக தமிழ் இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்தி வந்துள்ளது. யுத்தத்துக்குப் பின்னரும் தமிழ் இன அழிப்பை இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
(3) உலக நாடுகளின் உதவி இல்லாமல், இந்த இனப்படுகொலை யுத்தத்தை இலங்கை அரசு செய்திருக்க முடியாது. இலங்கை அரசுக்கு, இங்கிலாந்து அரசு ஆயுத உதவி செய்ததோடு, இனக்கொலை நடத்திய சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளது.
தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை அரசு இனக்கொலை நடத்துவதற்கான இராணுவ பலத்தை கொடுக்கும் விதத்தில், அமெரிக்க அரசு இராணுவ உதவி செய்திருக்கிறது.
அமைதிக்கான பேச்சு வார்த்தை நடவடிக்கைகளின் போது அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்துகொண்டதால், 2009 இல் தமிழர்களின் பேரழிவுக்கு அது வழி வகுத்தது.
இந்தத் தமிழ் இனப்படுகொலையில் இந்திய அரசின் பங்கு குறித்து வலுவான சாட்சியங்களையும் ஆவண ஆதாரங்களையும் ஆய்வு செய்த பின், அதனைக் குறித்து முடிவை தீர்ப்பாயம் தெரிவிக்கும்.
ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் ஈழத் தமிழர் இனப்படுகொலை உண்மையை உலகத்துக்கு அறிவித்துவிட்டது.

இதுவரை போர்க்குற்றம் என்று சொல்லப்பட்ட வார்த்தைப் பிரயோகம் சிங்கள அரசின் கொடிய குற்றத்தை சற்று நீர்த்துப்போக வைக்கின்ற முயற்சி என்றே கருதி தொடக்கத்திலிருந்தே நடந்தது இனப்படுகொலை என்பதனை நாம் அழுத்தமாக வலியுறுத்தி வந்திருக்கிறோம்.
இந்த விசாரணையின் போது விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளா? என்ற கருத்து விவாதிக்கப்பட்ட போது, “இது மேல்நாட்டு அரசாங்கங்களால் தங்களுடைய அரசியல் பூகோள நலன்களுக்காக உரிமைக்குப் போராடுபவர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டாகும் என்று மியன்மார் தேசத்தின் ஜனநாயகப் போராளி மவுங் ஜார்னி தெரிவித்தார்.
அப்படிப் பார்த்தால், நெல்சன் மண்டேலாவும் ஒரு காலத்தில் பயங்கரவாதிதான். ஆனால், அவர் விடுதலைப் போராளி என்று உலகம் போற்றுகிறது. அவர் விடுதலைப் போராளி என்றால், விடுதலைப்புலிகள் இயக்கமும் விடுதலைப் போராளி இயக்கம்தான் என்பதனை தீர்ப்பாயம் அந்த விவாதத்தில் தெரிவித்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பாய நீதிபதிகளில் ஒருவரான டென்னிஸ் ஹாலிடே என்பவர் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தமிழர் படுகொலையை தடுக்கத் தவறியதோடு, அப்படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்டு தன் கடமையில் தவறியது என்றும், சர்வதேச சமுதாயமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது என்றும் டென்னிஸ் ஹாலிடே குற்றம் சாட்டினார்.
ஜெர்மனி தீர்ப்பாய விசாரணையில், உலகம் எல்லாம் உள்ள தமிழர்களின் ரணமாகிப் போன இதயங்களுக்கு மருந்து போடுவது போல தீர்ப்பாயம் “ஈழத் தமிழர்கள்” என்றே இலங்கைத் தீவின் தமிழர்களை குறிப்பிட்டது ஆறுதலையும் ஈழ விடியல் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜெர்மன் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நாள், ஐ.நா. சபை கடைபிடிக்கின்ற உலக மனித உரிமை நாளான டிசம்பர் 10 என்பது மடிந்த மாவீரர்களின் மகத்தான தியாகத்தால் விளைந்துள்ள சத்தியத்தின் வெற்றியாகும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக