நேற்று மாலை 17h14 அளவில் Paris-Limoges (Haute-Vienne) இடையில்
பயணித்த Intercités Teoz (n°3657) தொடருந்து தண்டவாளத்திலிருந்து விலகி
Brétigny-sur-Orge (Essonne) தொடருந்து நிலையத்தில்விபத்திற்குள்ளாகி
உள்ளது. தொடருந்தின் கடைப் பகுதியிலுள்ள கிட்டத்தட்ட 370 பயணிகள் பயணித்த
ஆறு அல்லது ஏழு தொடருந்துப் பெட்டிகள் விபத்துக்கு உள்ளாகி உள்ளன. இப்
பெட்டிகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகிக் கவிழ்ந்துள்ளன. உடனடியாக சிவப்பு
எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டு மீட்புப்பணிகள் துரிதகதியில் ஆரம்பித்து விடப்பட்டன.
இரவு 22 மணியளவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ள முதலுதவிச்
சேவையினர் 22 கடுமையான காயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையிலுள்ள்ளதாகவும்
அறிவித்துள்ளனர். மேலும் 60 காயமடைந்தோரையும் மீட்டுள்ள அவசர சிகிச்சைப்
படையினரும் தீயணைப்புப் படை வீரர்களும் தொடர்ந்தும் மீட்புப் பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை சிகிச்சைப்பிரிவினர் 180 பேரைப் பொறுப்பேற்றுள்ளனர். காயமடைந்த
மற்றும் இறந்தவர்களின் எண்னிக்கை அதிகரித்த வண்ணமே செல்கின்றது. உடனடியான நிவாரண
மற்றும் இடர்நிவாரண மையம் ஒன்றை ESSONNE நிர்வாகமும் SNCF நிர்வாகமும்
அமைத்துள்ளனர். பாரிஸின் வைத்தியசாலைகளும் அரசினர் வைத்தியசாலைகளும் (AP-HP)
உடனடியாக அவசர சிகிச்சைகளிற்கு பலரை உள்வாங்கும் வண்ணம் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளன. பிரான்சுவா ஒல்லோந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு
ஆறுதல் கூறியதோடு அனைவரையும் ஒன்றிணைந்து இந்தச் சிக்கலான நேரத்தில்
செயற்படுமாறு கோரியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக நீத்தித்துறையினரின்
விசாரணையையும் SNCFஇன் விசாரணையையும் போக்குவரத்து அமைச்சின்
விசாரணைகளையும் உடனடியாக ஆரம்பிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையின் பின்னர் இவ்விபத்தானது தொடருந்துப் பாதையின்
சமிக்கை மற்றும் இரும்புப்பாதை மாற்றும் அமைப்பின் தவறினால்
ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. கடந்த மே மாதத்திலிருந்தே SNCF பிரெத்தினி
தொடருந்து நிலையத்தின் சமிக்கை மற்றும் பாதை ஒழுங்கு மாற்றும் அமைப்பில்
கோளாறு உள்ளதாகவும் அதற்கான திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்படுவதாகவும்
பிரெத்தினி தொடருந்து நிலையத்தினுள் நுழையும் தொடருந்துகளின் சேவைகள்
மிகவும் மட்டுப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இத் தொடருந்து
நிலையத்தைத் தாண்டி வேலை நேரங்களில் நிமிடத்திற்கு மூன்று தொடருந்துகள்
பரிஸ் நோக்கிச் செல்லும் முக்கிய பாதையாக இது இருக்கின்றது. இப்பகுதிக்கான
போக்குவரத்து அடுத்த மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த் மற்றும் உள்துறை
அமைச்சர் மனுவல் வால்ஸ், போக்குவரத்து அமைச்சர் பிரெட்ரிக் குவியே ஆகியோர்
விரைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக