சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

9 ஜூலை, 2013

காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உண்டு; மேனனிடம் மஹிந்த தெரிவிப்பு




அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் காணப்படும் காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உண்டு.

எனவே, அது தொடர்பில் விரிவாக ஆராய்ந்தே முடிவு காணப்பட வேண்டியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

13வது திருத்த சட்டத்தின் மீதான மாற்றங்கள் செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டு தனது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் முன்வைக்க வேண்டும். அதுவே, சிறந்த பொறிமுறையாகவும் இருக்கும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போதே மேற்கண்ட விடயங்களை சிவ்சங்கர் மேனனிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துக் கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறிய நாடு. அதற்குள் காணப்படுகின்ற மாகாண முறைமைக்குள் பொலிஸ், காணி அதிகாரங்களை தனித்தொரு மாகாணத்திற்கு வழங்க முடியாது. அது, மற்ற மாகாணங்களிலும் சிக்கல்களை உண்டாக்கும். எனவே, அது தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழு அந்த முயற்சிகளில் ஈடுபடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சுமூகமான முடிவுகளைக்காண பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிவ்சங்கர் மேனனிடம் கூறியுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும் சிவ்சங்கர் மேனனுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தனர்.

இதனிடையே, 13வது திருத்த சட்டங்களில் மாற்றங்களைச் செய்ய இந்தியா அனுமதிக்காது என்று இன்று காலை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடனான சந்திப்பின் போது சிவ்சங்கர் மேனன் உறுதியளித்ததாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக