யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் வடக்கு , கிழக்கு மக்கள் எதிர்பார்த்த முழுமையான சமாதானத்தை அவர்கள்
இன்னமும் அனுபவிக்கவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் .
நேற்றுமுன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து அங்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த வடக்கு மாகாண சபை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
இன்று இந்தக் கூட்டத்திற்கு அரசு மக்களை அச்சுறுத்தியதன் காரணமாக
யாரும் வரவில்லை . அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இங்கு வந்துள்ளவர்கள்
எமது கட்சிக்கு உதவிபுரிவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு . நாங்கள்
எந்தவித சட்டவிரோத செயல்களையும் செய்யவில்லை , இந்நாட்டில் ஜனநாயக உரிமைகள்
மறுக்கப்பட்டுள்ளன . அதற்காகவே நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம் .
எமது எதிர்காலச் சந்ததிகளுக்கு நல்ல ஒரு தேசத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காக உழைத்து வருகின்றோம் .
யுத்தத்திற்குப் பின்னர் , வடக்கு , கிழக்கு மக்கள் எதிர்பார்த்த
எதுவும் கிடைக்கவில்லை . பொருளாதார நெருக்கடி , அச்சுறுத்தல்கள் என பல
துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர் . எனவே
எதிர்காலத்தில் எமது கட்சியை பலமடையச் செய்வதன் மூலம் நல்லதொரு அமைதியான
தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும் . இதற்காக எமக்குச் சகல மக்களும்
வாக்களிக்க வேண்டும் என்றார் .
இதேவேளை , இவருடைய வருகையை ஒட்டி அதிக இராணுவப் புலனாய்வாளர்கள்
நிறுத்தப்பட்டு கூட்டத்திற்குச் சென்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டமை
தொடர்பாகவும் அக்கட்சி ஆதரவாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக