சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

18 அக்டோபர், 2013

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேசுங்கள்; மஹிந்த, விக்னேஸ்வரன் ஆகியோருக்கு மனோ எம்.பி. வேண்டுகோள்.


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் , வடமாகாண
முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனும் பேச்சு நடத்த வேண்டும் என்று இருவருக்கும் அனுப்பியுள்ள கடிதங்களில் , ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் , நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் போர் முடிவுக்கு வந்ததும் விடுவிக்கப்படுவர் என்று எதிர்பார்த்தோம் .
ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை . மாறாக சிறைக்கூடங்களில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாகவும் , நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்து நோய் வாய்ப்பட்டதன் காரணமாகவும் பல கைதிகள் உயிரிழக்க வேண்டி ஏற்பட்டது .
அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுகள் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நடைபெற வேண்டும் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள் . இது தொடர்பான பொதுவான நிலைப்பாடு அரசுக்கும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் விரைவில் உருவாகும் .
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்ற அம்சம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையுடன் பேச்சு நடத்தும் அதேவேளையில் மனிதாபிமான விடயங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு வட மாகாண முதலமைச்சருடனும் பேச்சு நடத்தப்பட வேண்டும் .
மேலும் இந்தக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அல்லது சட்ட ரீதியான பிணை ஆகிய ஏதாவதொரு அடிப்படை நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் .
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் , வடமாகாண முதல்வர் என்ற அடிப்படையில் பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்த தமிழ் மக்களின் மனிதாபிமான விடயங்கள் தொடர்பில் அரசுடன் பேச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும் .
மனிதாபிமான விடய அடிப்படையில் நீண்டகாலம் சிறைகளில் இருக்கும் கைதிகளின் பிரச்சினை முன்னுரிமை பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன் .
வடமாகாண சபைத் தேர்தலை அடுத்து நாட்டில் புதிய நம்பிக்கையும் , மகிழ்ச்சியும் எமது சமூகத்திலிருந்து மறக்கடிக்கப்பட்டு , நீண்ட காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கும்  நீதி  பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக