வடமாகாண சபைத் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களைக்
கண்டித்து இன்று இடம்பெற்ற சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வின்போது
கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
சபையின் தலைவர் இ . தேவசகாயம்பிள்ளை தலைமையில் சபையின் காலை 10
மணியளவில் ஆரம்பமானபோது அமர்வில் சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஞா .
கிஷோர் இத்தீர்மானத்தை முன்மொழிந்தார் . இன்னொரு ஆளுங்கட்சி உறுப்பினரான
அ . பாலமயூரன் வழிமொழிந்தார் .
தீர்மானத்தை முன்வைத்து கிஷோர் உரையாற்றும் போது
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் பெருவாரியாக தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்துள்ளனர் .
அபிவிருத்திமாயைக்காட்டி அடாவடி மூலம் மக்களை ஏமாற்ற
முயற்சித்தவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் . இதைத் தாங்கிக் கொள்ள
முடியாதவர்கள் எமது ஆதரவாளர்களுக்கு பல வழிகளிலும் இம்சை கொடுத்து
வருகின்றனர் .
பல இடங்களிலும் தாக்கி வருகின்றனர் . எமது மாகாணசபை உறுப்பினரான பா .
கஜதீபன் அவர்களுடன் தீவுப்பகுதி மக்களைச் சந்தித்து நன்றி கூறச்சென்ற போது
அவரையும் என்னையும் கற்கள் வீசித்தாக்கினார்கள் .
நாங்கள் மயிரிழையில் தப்பினோம் . அதன் பின்பும் பல ஆதரவாளர்கள்
தாக்கப்பட்டுள்ளனர் . நேற்றும் ஒரு ஆதரவாளர் ஊர்காவற்றுறையில் கடுமையாகத்
தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இவ்வாறான தேர்தலுக்குப் பின்னான எமது ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்களை
வன்மையாகக் கண்டிப்பதுடன் இவ்வாறான கோழைத்தனமான தாக்குதல்கள் மூலம்
மக்களின் தேசிய உணர்வை அடாவடியாக அடக்க முடியாது எனவும் தெரிவித்தார் .
பின்னர் பிரேரணை சபையினரின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக