எனக்கும் சானல் 4 சக ஊழியர்களுக்கும்
[இலங்கை] அரசின் உளவு, காவல் மற்றும் குடிநுழைவு அதிகாரிகள் ஓயாமல் தந்த
உளைச்சலால், இலங்கை செய்தியாளர்களுள் தைரியமும் ஆர்வமும் கொண்ட உங்களில்
பிறர் துயரில் இன்புறும் உணர்வேற்பட்டதைக் கண்டுகொண்டேன்.
அடிபணிந்து, ராச்சியத்தின் காலாவதியான பரப்புரைகளைக் கூக்கரலிடும் ராட்வெய்லர் [நாய்வகைகளில் ஒன்று] நிருபர்களை இங்கே நான் குறிப்பிடவில்லை, அவர்களும் இதை ரசித்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை என்றாலும்.
ஒவ்வொரு நாளும் இத்தகைய உளைச்சலோடு வாழ்ந்துகொண்டு, அதுகுறித்து
குறைகூறாமலிருக்கும், அல்லது குறைகூற முடியாமலிருக்கும் உங்களைப்பற்றி
பேசுகிறேன். நீங்கள் செய்கிறவற்றைச் செய்தல் என்பது சமயத்தில் எத்தனை
கடினமாக இருக்கிறது என்று என்னிடம் நம்பகமாய்ப் பகிர்ந்துகொண்டவர்களைப்
பற்றிப் பேசுகிறேன்.
அடிபணிந்து, ராச்சியத்தின் காலாவதியான பரப்புரைகளைக் கூக்கரலிடும் ராட்வெய்லர் [நாய்வகைகளில் ஒன்று] நிருபர்களை இங்கே நான் குறிப்பிடவில்லை, அவர்களும் இதை ரசித்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை என்றாலும்.
‘அரசின் பத்திரிகை அடக்குமுறை’
ஒத்துக்கொள்ளுங்கள். ஒருவழியாக பிரித்தானியராகிய நாங்கள், உங்களின் அழகான வெப்பமண்டலச் சுவர்க்கத்தில் அரசின் அடக்குமுறையாகிய குளிர்க்காற்றை நேரடியாக உணர்ந்துகொண்டிருந்தோம்.
வடக்கு நோக்கிச் சென்ற எங்களின் புகைவண்டி, எங்களோடு பயணத்திலிருந்த உளவு முகவர்கள் துப்புக் கொடுக்க அரசு ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டிருந்ததை அறிந்தபோது, இரகசியமாக உங்களின் ஒரு சிறிய பகுதியாவது திளைக்கவில்லையா என்ன?
சரி, எங்கள் வருகையின் கடைசி இரு நாட்களில் குறைந்தபட்சம் அரசின் ஐந்து உளவு வாகனங்களாவது தனித்தனியாக எங்களைப் பின் தொடர்ந்தன என்பதைக் கேட்டபோது? அது சின்னப் புன்னகையை உங்களிடமிருந்து தருவிக்கவில்லையா என்ன?
சனிக்கிழமையன்று நேர்காணல் ஒன்றிலிருந்து நாங்கள் வெளிவந்தபோது, முரடர் கூட்டம் பாறைகளை எறிந்து தாக்கியதை நீங்கள் கேள்வியுற்றபோது எங்கள்மேல் நீங்கள் இரக்கப்படவில்லை என்று ஒருகணம்கூட சூசகமாகத் தெரிவிக்கமாட்டேன்.
அரசின் தொலைக்காட்சி தீய ஒளிபரப்புகளில் என் நண்பரும் சக ஊழியரும் “போர் தவிர்ப்பு வளையத்தின்” இயக்குனருமான கலம் மக்ரே மீண்டும் மீண்டும் தமிழீழப் புலிகளின் ஆதரவாளராகக் குற்றஞ்சாட்டப்பட்டபோது எங்களைப்போன்றே நீங்களும் வெறுப்பில் சுருண்டிருக்கக்கூடும்.
உங்களின் இனிய அதிபரோடு (எனக்கு வாக்குக்கொடுத்திருந்த ஒரு கோப்பைத் தேநீரை இன்னும் அவர் எனக்குத் தரவில்லை என்பது இருக்கட்டும்) செய்திக் கருத்தரங்கங்களுக்கு வரத் “தகுதியானவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்தியாளர்களின்” பட்டியல்களிலிருந்து நாங்கள் நீக்கப்பட்டபோது எங்களுக்கு ஏற்பட்ட அருவருப்பையும் அறச்சீற்றத்தையும் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.
பொதுநலவாய [காமன்வெல்த்] நாடுகள் அமைப்பின் பேச்சுப்பிரதிநிதியான ரிச்சர்ட் உக்கு, உங்களின் வெகுசன ஊடகத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வற்புறுத்தியிருக்காவிட்டால், என் தொகுப்பாளர் பென் டி பியரின் தளர்வுறா உறுதி மட்டும் இல்லாவிட்டிருந்தால், நாங்கள் இங்கே வந்திருக்க மாட்டோம்.
சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள்
மேலே குறிப்பிட்டவற்றில் சிலவற்றுக்கு நீங்கள் பிறர் துன்பத்தில் இன்புற்று ஏளனத்தை வெளிப்படுத்தியிருந்தால், வருத்தப்பட வேண்டாம். இந்தப்பணியில் சில பதற்றத் தருணங்கள் இருந்தன; ஆனால் அதிலும் இன்புற்றோம். உங்கள் நாட்டை நேசிக்கிறோம்.
சொல்லப்பட்டதற்கு மாறாக எங்களுக்கு அங்கே நண்பர்கள் நிறைய உண்டு எனவும் அறிவோம்.
சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள். ஆக எங்களுக்காகப் பலரும் இரகசியமாகத் தங்கள் கட்டை விரல்களை உயர்த்தினார்கள்; கிசுகிசுத்தார்கள்; கண்ணடித்தார்கள்; தங்கள் ஆமோதிப்பைக் குறிக்கும் முகமாகத் தலையாட்டினார்கள். சிலசமயங்களில் எதிர்பாராத இடங்களில் இவை நேர்ந்தன.
ஒடுக்குகிற நாட்டில், எரிச்சலூட்டுகிற உளவு உறுத்திகளை நோக்கிப் புகைப்படக் கருவியைத் திருப்புவதைவிடவும் ஒரு செய்தியாளராக நான் மகிழக்கூடியவை அதிகமில்லை. கொழும்பு நகரத்தில் யார்க் தெரு சி.ஐ.டி தலைமையகத்தினருகே அப்படி எனக்குக் கிடைத்த வாய்ப்பு அசாதாரணமான திருப்தியை எனக்குத் தந்ததை நான் சொல்லத்தான் வேண்டும்.
கடாஃபியின் அதிகாரபூர்வப் பாதுகாவலருடன் எனக்கு ஏற்பட்ட சண்டையோடு கூட, ஜிம்பாப்வே, பர்மா, சீனா, சிரியா, சூடான் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த இதேபோன்ற சண்டைகள் எனக்கு அழுத்தமாக நினைவிருக்கின்றன.
அதேநேரத்தில் அரசு ஒடுக்குமுறையின் இந்த முகவர்கள் எதையெல்லாம் செய்ய வல்லவர்கள் என்பதை எளிமைப்படுத்திப்பேசுதல் என் எண்ணமல்ல.
’வரம்பெல்லைகளைத் தள்ளுங்கள்’
வேற்று நாட்டு செய்தியாளர்களாக, உலக நாடுகளின் உச்சி மாநாடொன்றுக்கு வந்திருக்கும்போது, அதுவும் எங்கள் பிரதம மந்திரியும், வெளிநாட்டுச் செயலரும் இங்கே இருக்கும்போது, உங்களுக்கில்லாத பாதுகாப்புப் போர்வை எங்களுக்கிருந்ததை நான் அறிவேன்.
எங்களைக் கைது செய்வதோ, சித்தரவதை செய்வதோ, அல்லது கொல்வதோ - இவற்றைச் செய்ய சபலமிருந்ததென்றாலும் -நிகழ்ந்திருந்தால் அது அறிவீனமான செயலாக முடிந்திருக்கும் என்று கணிக்கிறேன்.
இங்கே வருவதற்குமுன்னரே நானும் கலம் மக்ரேவும் சாவு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம். இருந்தாலும், உங்களைவிட நாங்கள் பாதுகாப்பாக இருந்தோம் என்று தெரிகிறது.
ஆகவேதான், உங்கள் அதிபர் நேற்று ”சுதந்திர, சனநாயக நாடு” என்று குறிப்பிட்டிருந்த இலங்கையில், நாங்கள் எதிர்பார்த்த வகையில், தள்ள முடியுமென்று நாங்கள் கருதிய வரம்பெல்லைகளைத் தள்ளி விரிவுபடுத்துவதை முக்கியமென்று கருதினோம்.
மகிந்த ராஜபக்ச கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் உள்ளிட்ட பொதுநலவாய மதிப்பீடுகளில் கடப்பாடுடையவராகத் தன்னைக் காட்டியிருக்கிறார்.
உணர்ச்சியற்ற முகத்தோடு எப்படி இதை அவர் செய்தார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களில் சில பத்திரிகையாசிரியர்கள் கட்டப்பட்ட ஆடுகளைப் போலிருக்கிறீர்கள். உங்கள் அரசின் தொலைக்காட்சி பியொங்யாங்கை [கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு அல்லது வடகொரியாவின் தலைநகரம்] நோக்கி நகர்ந்தபடியிருக்கிறது.
உங்களில் குறைந்தபட்சம் ஒன்பது பேர்களாவது கடந்த பத்து வருடங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என அறிகிறேன்.
முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் சாவைப்போல என்னைச் சில்லிடவைத்தது எதுவுமேயில்லை.
பிரகீத் எக்னெலிகொட
கடத்தப்பட்ட கணவர் பிரகீத் எக்னெலிகொட குறித்து அவர் மனைவி இன்னும் விசாரித்துக்கொண்டே இருக்கிறார் எனக் கேள்விப்படும்போது நான் வலியில் சுருங்கிப்போகிறேன். எக்னெலிகோடாவின் தடயமென்று எதுவுமில்லை என்று நீங்கள் கேள்விப்பட்டதை நானும் கேள்விப்பட்டேன்.
பத்திரிகைச் சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில், நியூயார்க்கைத் தளமாகக் கொண்டுள்ள ”செய்தியாளர்கள் பாதுகாப்புக் குழு” இலங்கையை 179-ல் 162-ஆவது இடத்தில் தரவரிசைப்படுத்தியிருக்கிறது என்றறிவேன். உங்கள் ஆயுள் எதிர்பார்ப்பை அபாயத்துக்கு உள்ளாக்கி நீங்கள் கடந்து செல்லும் சிவப்புக்கோடுகள் எனக்குத் தெரியும். ராஜபக்ச சகோதரர்களை விமரிசித்து எழுதுவதில் உங்களுக்கிருக்கும் இடர்ப்பாடு எனக்குத் தெரியும்.
இராணுவத்தைப் பற்றி உங்களால் எழுத முடியாது. மேலும் எங்களைப் போலன்றி, உங்களால் போரைக் குறிப்பிடக்கூட முடியாது.
“எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பால்” உலகில் எங்கிருக்கும் எந்தப் பாராளுமன்ற சனநாயகத்துக்கும் ஆக மோசமான வரலாறுடைய பத்திரிகை சுதந்திரம் என்று தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கிற வரலாறோடு நீங்கள் வசிக்கிறீர்கள் என்று தெரியும்.
எனினும், இலங்கையைப் பாராளுமன்ற சனநாயகம் என உருவமைப்பது முரண்நகையை இன்னும் நீட்டிப்பது போலாகும்.
இருந்தாலும், இந்தத்தடைகளைத் தாண்டி துணிவோடு உங்கள் வேலைகளைச் செய்ய நீங்கள் வழிகளைக் கண்டுபிடித்திருப்பதை நான் வியக்கிறேன்.
நேற்று ராஜபக்சவின் செய்தியாளர் கருத்தரங்கத்தில் ஒரு சிங்களச் செய்தியாளர் முதலில் எழுந்து போர்க்குற்றச்சாட்டுகளைக் குறித்து அதிபரிடம் கேட்டபோது, என் நாற்காலியிலிருந்து ஏறக்குறைய நான் விழுந்தேவிட்டேன்.
போற்றுதல்
அவர் அதைச் செய்ததற்கு நாங்கள் அனைவரும் சாட்சி. இலங்கையின்மேலிருக்கும் வெளிச்சம் மீண்டும் அகன்றவுடன் அவர் நலமாயிருக்க கடவுளின் அருளில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
எங்கள் பாதுகாப்புக்கு வந்த அச்சுறுத்தல்களால், எங்கள் திட்டப்படியின்றி முன்னதாகவே வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டு, இப்போது இதை விமானத்தில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.
உங்களின் ஞாயிறு தினச் செய்தித்தாள்களை நான் வாசிக்கிறேன். சில சமயம் புத்திசாலித்தனமாகச் சுற்றுவழிகளில் நீங்கள் செயல்படுவது புரிகிறது.
உண்மையில் எவ்வளவு கடினமாக அது இருக்கும் என்று புரிகிறது. தங்கள் வாழ்வு ஆபத்திலிருக்க அந்த மனிதர்களை நீங்கள் மேற்கோள்காட்டிப் பேச நேரும்போது பயங்கரமான தடுமாற்றத்தை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பது புரிகிறது. உண்மையில் அது இக்கட்டானதுதான். உங்கள் பதற்றங்களில் நான் பங்குகொள்கிறேன்.
உங்களைச் சந்தித்தது புத்துணர்வூக்கம் தந்தது. அடக்குமுறையை எதிர்கொண்டபடி நீங்கள் செயல்படுகின்ற விதத்துக்காக நாங்கள் அனைவரும் உங்களைப் போற்றுகிறோம்.
மொழியாக்கம்: கவிஞர் பெருந்தேவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக