வடக்கில் இராணுவப் புலனாய்வாளர்களின் அடாவடியை உடன்
நிறுத்தி அங்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசிடம் மன்னார்
ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் அடிகளார் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
மனிதாபிமானப்
பணியாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களைக் கண்டித்து மன்னாரில்
நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காணாமல்போன
உறவுகளைத் தேடி அவர்களின் குடும்பத்தினர் நடத்தும் போராட்டங்களில்
முன்னின்று செயற்படும் மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின்
இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை என்பவருடைய வீட்டிற்கு நேற்று முன்தினம்
அதிகாலை சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அவருக்கும், அவருடைய
குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்திருந்தனர்.
இதனைக்
கண்டித்தும், காணாமல் போனோரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வருவோருக்கு
விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்களைக் கண்டித்தும் மன்னார் பிரஜைகள் குழு,
தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவை மற்றும் மன்னார் மாவட்ட காணாமல்போன
உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கம் ஆகியவை இணைந்து கண்டனப் பேரணியை
நேற்று நடத்தின.
இந்தப்
பேரணியில் மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் அடிகளாரும்
கலந்து கொண்டார். குறித்த பேரணி மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் இருந்து
காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி, மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்
அலுவலகத்தைச் சென்றடைந்தது.
இதன்போது
பேரணியில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களுக்கும், மன்னார் மாவட்ட உதவி
பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு
இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச்
சந்திப்பின்போது மன்னார் மாவட்டத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில்
பணியாற்றுகின்றவர் களுக்கு புலனாய்வுத்துறை என்ற பெயரில் தொடர்ச்சியாக
விடுக்கப்பட்டு வருகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பாக பேரணியில்
கலந்துகொண்டவர்கள் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பேரணி மன்னார் மாவட்ட செயலகத்திற்கு சென்று,
ஜனாதிபதிக்கு வழங்கும் முகமாக மகஜர் ஒன்றை மன்னார் மாவட்ட மேலதிக அரச
அதிபரிடம் கையளித்தனர்.
இந்தப்
பேரணியில் கலந்துகொண்ட மன்னார் ஆயர் தமது நிலைப்பாட்டை மன்னார் மாவட்ட
பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர்
ஆகியோருக்குப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
இந்த
நாட்டை ஜனநாயக நாடு என்று அரசு கூறி வருகின்றபோதும் வடக்கில் தமிழ் மக்கள்
அஹிம்சை ரீதியில் உரிமைப் போராட்டம் நடத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
இராணுவத்தினரால் கடத்தப்பட்டவர்களைத் தேடி -காணாமல்போனோரைத் தேடி –
இராணுவத்தின் நிலா ஆக்கிரமிப்பைக் கண்டித்து நடத்தப்படுகின்ற
போராட்டங்களில் முன்னின்று செயற்படுவர்களை இராணுவப் புலனாய்வாளர்கள்
குறிவைத்து அவர்களை அச்சுறுத்தியும், தாக்கியும் வருகின்றனர்.
எனவே,
வடக்கில் இராணுவப் புலனாய்வாளர்களின் அடாவடியை உடன் நிறுத்தி அங்கு
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசிடம் வேண்டுகோள்
விடுக்கின்றேன்”.
இந்தப்
பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய
கலாநிதி வி.சத்தியலிங்கம், வட மாகாண மீன்பிடி – போக்குவரத்து அமைச்சார்
பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா,
தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.ஜேசுதாசன், கத்தோலிக்க
குருமார்கள், மன்னார் மாவட்ட காணாமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின்
சங்கப் பிரநிதிகள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்
எனப் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக