தமிழீழ விடுதலைப் புலிகளின் வல்வெட்டித்துறை தீருவில் துயிலுமில்லம் அமைந்துள்ள ஆதனம் வல்வெட்டித்துறை நகரசபைக்கே செந்தமானது என பருத்தித்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .இத்துயிலுமில்லம் தமிழீழவிடுதலைப் புலிகளுடையது என்பதால் புலிகளின்
சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என சிங்களத்தின் பயங்கரவாதத்
தடுப்புப்பிரிவினர் தாக்கல் செய்த வழக்கினை பருத்தித்துறை நீதிமன்றம்
தள்ளுபடிசெய்துள்ளது .
குமரப்பா - புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் நினைவு தூபிகளுடன்
கேணல் கிட்டு உள்ளிட்ட போராளிகளது நினைவு தூபியும் வல்வெட்டித்துறை
தீருவில் தூபியிலேயே அமைக்கப்பட்டிருந்தது . எனினும் அவை அனைத்தையும்
இடித்தழித்த சிங்கள இராணுவம் அங்கு படைமுகாம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது .
எனினும் குறித்த காணி தேசியத் தலைவர் பிரபாகரனின் பரம்பரையுடையதாகும் .இதனை அவர்கள் வல்வெட்டித்துறைச் சிவன் கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர் .இக்காணியை வல்வெட்டித்துறை நகர சபையினர் 99 வருடக் குத்தகைக்கு ஆலய
நிர்வாகத்தினரிடமிருந்து கடந்த யூன் மாதம் 07 ஆம் திகதி பெற்றுள்ளனர் .இதனால் தமக்கே சொந்தமானதென உரிமை கோரியிருந்த வல்வெட்டித்துறை
நகரசபை அங்கு சிறுவர் பூங்காவொன்றினை அமைக்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தது
.இதற்காகப் பெயர்பலகை நாட்டப்பட்டு பூங்கா அமைப்பு வேலைகளும்
ஆரம்பிக்கப்பட்டிருந்தது . இந்த ஆரம்ப நிகழ்வில் இராணுவம் அடாத்தான
செயல்களில் ஈடுபட்டிருந்துது .குறித்த காணிக்கு உரிமை கோரி இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு
பொலிஸார் இலங்கையின் குடியியல் சட்டத்தின் 66 ஆவது பிரிவின் கீழ்
வழக்கொன்றினை பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர் .
குறித்த நகரசபை தலைவர் அனந்தராஜ் , துணைதலைவர் சதீஸ் மற்றும்
உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோரிற்கு எதிராகவே வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் குறித்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிபதி
சிறிநிதி ஆநந்தசேகரம் , குறித்த பூங்கா அமைப்பு பணிகளிற்கு குந்தகம்
விளைவிக்க கூடாதென பணித்ததுடன் அங்கு படை முகாமிற்கு மண் அகழ்வதை உடனடியாக
தடுத்து நிறுத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார் .
அண்மையில் பூங்காவினது காணியினுள் நடப்பட்டிருந்த பெயர் பலகைகளும்
இடித்தழிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக