சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

27 நவம்பர், 2013

மாவீரர்களின் தியாகங்களை நெஞ்சில் இருத்தி நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்துவோம் - நவம்பர்-இருபத்தேழு! தேசிய மாவீரர் பணிச் செயலகம்!!

தமிழ் மக்களாகிய எமது புனித நாட்களில் மாவீரர்களை நினைவு கூரும் நாள் மிக முக்கிய
நாளாகும் . இந்நாள் எமது ஈழ மண் விடிவிற்காகவும் , சுதந்திர சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடி தம்முயிரை ஆகுதியாக்கி , மண்ணுக்கு உரமாகி , எமது உயிருடன் கலந்துவிட்டவர்களின் நினைவு நாளாகும் .
உங்களது உயிரிலும் மேலான பிள்ளைகளும் , எமது சக போராளிகளுமான இந்த மாவீரர்களின் தற்கொடை , அர்ப்பணிப்பு , தியாகம் , உணர்வுகள் , கனவுகள் , இலட்சியதாகம் யாவும் எங்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து , சணமும் மறக்கப்பட முடியாதவையாகும் . இப் புனிதர்களை எப்படி மறக்க முடியும் ? . இப்புவியில் தமிழ் மக்கள் வாழும்வரை இவர்களை நினைவு கூர்ந்து , சுடரேற்றி , மலர்தூவி வீரவணக்கம்
செலுத்துவது தமிழர்களது தலையாய கடமையாகும் .

இம்மாவீரர்களது உறங்குமிடமான மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டுவிட்டது . அழித்துவிட்டோம் என்று யாரும் கனவு காணலாம் . விதைத்தவர்கள் விழுது விடுவார்கள் . அவர்களது உடலமும் உணர்வுகளும் எமது மண்ணுடன் கலந்துவிட்டது . இடிப்புகளும் அழிப்புகளும் முன்பும் நடந்தது . பின் நிறுவப்பட்டது . காலம் வரும் காத்திருப்போம் .
எம் உறவுகளே !
இந்நிகழ்வும் , இதன் ஒழுங்கு முறைகளும் எம் தேசியத் தலைவராலும் , மூத்த உறுப்பினர்களாலும் , மூத்த தளபதிகளாலும் பலமுறை கூடி ஆராய்ந்து , கலந்துரையாடி முடிவு செய்து எங்கள் மாவீரர் பணிச்செயலகத்தால் கையேடாக வெளியிடப்பட்டது . இதனடிப்படையில் எங்கு மாவீரர் நாள் கடைப்பிடித்தாலும் வேறுபடாமல் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பது எமது தேசியத் தலைவர் அவர்களது வேண்டுகோளாகும் .
மாவீரர்களின் இத்தகைய அர்ப்பணிப்பு நினைவுகள் எம்மை இலட்சியத்தின்பால் வழிநடத்தும் . எமது விடுதலைப் போராட்டம் முடிந்துவிடவில்லை . தேசியத் தலைவரும் , தளபதிகளும் , போராளிகளும் , உணர்வின்பால் வாழ்ந்த மக்களும் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை . மக்களைக் காப்பாற்ற நாம் ஆயுதங்களை மௌனிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம் . நாம் என்றும் தோல்வியை தழுவி இலட்சியத்தில் இருந்து விலகிவிட்ட வரலாறே கிடையாது .
எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எமக்கிடையே தேசியத்தின்பாற்பட்ட புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்புமான ஒற்றுமை மிக முக்கியமாகும் . இதை எமது தேசியத் தலைவர் பெயரால் புனித மாவீரர் நாளில் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும் .
எம் மாவீரர்களின் இவ் உயர்வான , புனிதமான நிகழ்வை உணர்வுடனும் , தத்துவார்த்தமாகவும் கடைப்பிடிக்க வேண்டும் . இது , முற்று முழுவதுமான சோகம் நிறைந்ததாகவோ , படாடோபமாகவோ , டாம்பீகமாகவோ , ஆடம்பரமானதாகவோ அல்லாது வீரம் செறிந்து உணர்வு கலந்த உன்னதமான உயரிய வரலாற்று நிகழ்வாகும் . மாவீரர்களின் உந்து சக்தி எம்மை இலட்சியத்தில் தவறாது வழிநடத்திச் செல்லும் என நம்புவோமாக .
ஆகவே எனது அன்பான இனிய உறவுகளே , இந் நிகழ்வைக் கடைப்பிடிப்பதன் பேரில் பெற்றோர் , உறவினரைக் கௌரவிப்பதுடன் நாமெல்லோரும் ஒன்றுபட்டு அடுத்த கட்டத்திற்கு நகரும் வல்லமையை பெறுவோமாக .
எனவே நாமெல்லோரும் இம் மாவீரர்களின் தியாகங்களை நெஞ்சில் இருத்தி நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தும் வேளை நாங்கள் எமது வாக்குறுதிப் பிரமாணங்களைத் தவறாது மீட்டுக் கொள்வோமாக .
நன்றி !
" புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "
 பொன். தியாகம்.
பணிமுதல்வர் .
தேசிய மாவீரர் பணிச்செயலகம் ,
தமிழீழ விடுதலைப் புலிகள் ,
தமிழீழம் - சர்வதேசம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக