சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

13 நவம்பர், 2013

பொதுநலவாய மாநாட்டு விவகாரத்தில் உண்மைக் குரலை உரத்து எழுப்பி தமிழினம் நீதிபெற வழிசமைப்போம் :பிரதமர் வி.உருத்திரகுமாரன்.


சிறிலங்காவில் இடம்பெறுகின்ற பொதுநலவாய மாநாட்டு விவகாரத்தில் எழுந்து வருகின்ற
புறக்கணிப்புகளிடையே , உண்மைக் குரலை உரத்து எழுப்பி தமிழினம் நீதிபெற வழிசமைப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி . உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் .
பொதுநலவாய நாடுகள் மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவதற்குக் கிடைத்த ஆதரவு அரசியல் நலன்களின் அடிப்படையில் அமைய அதற்கான எதிர்ப்பு தர்மத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி . உருத்திரகுமாரன் , சிறிலங்கா தொடர்பான சர்வதேச நிலைப்பாட்டில் தென் ஆசிய பிராந்திய வல்லரசாக கருதப்படும் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியம் வாய்ந்ததொன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார் .
ஏனைய நாடுகளின் சிறிலங்கா தொடர்பான நிலைப் பாட்டுகளில் இந்தியாவின் அரசியல் நகர்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன குறித்துரைத்து , சிறிலங்காவின் மனித உரிமைகள் மீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்குமுகமாக மொரிசியஸ் நாட்டின் பிரதமரின் பொதுநலவாய மாநாட்டின் புறக்கணிப்பு சிறிலங்கா சர்வதேச அரங்கில் தனிமைப் படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றது எனவும் பிரதமர் வி . உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் .
சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறும் காலத்தில் உலகத் தலவர்களினதும் ஊடகங்களினதும் கவனம் அங்கு குவிந்திருக்கும் இந்த வேளையில் ஈழத் தாயகத்திலும் புலத்திலும் தமிழகத்திலும் ஏனைய உலக நாடுகளிலும் தமிழ் மக்கள் தமது போராட்டங்களை மேலும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என வேண்டுவதோடு , இவ் அனைத்துப் போராட்டங்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவை பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்திக் கொள்கிறது என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி . உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையின் முழுவிபரம் :
சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை நடாத்துவதற்கு அனைத்துலகரீதியில் எழுந்திருக்கும் எதிர்ப்பு உண்மையையும் நீதியையும் எவராலும் மௌனிக்க வைக்க முடியாது என்பதனை வெளிப்படுத்துகிறது .
பொதுநலவாய நாடுகள் மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவதற்குக் கிடைத்த ஆதரவு அரசியல் நலன்களின் அடிப்படையில் அமைய அதற்கான எதிர்ப்பு தர்மத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது .
' தர்மத்தின் வாழ்வினை சூது கவ்வும் . ஆனால் தர்மம் மறுபடி வெல்லும் ' எனப் பாரதி பாடியது போல தர்மம் வெல்வதற்கு காலங்கள் பல எடுத்தாலும் அதன் வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என்பதனை சிறிலங்காவுக்கு எதிராக எழுந்து வரும் கண்டனக் குரல்கள் சுட்டி நிற்கின்றன .
பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு எழுந்திருக்கும் எதிர்ப்புகளில் தமிழகத்தின் எதிர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும் . நான் முன்னர் பல தடவைகள் சுட்டிக் காட்டியது போல ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் உள்நாட்டுநிலைமை காத்திரமான பாத்திரத்தை ஆற்ற முடியும் என்பதற்கு பொதுநலவாய மாநாட்டுக்கு தமிழ்நாடு காட்டும் எதிர்ப்பு நல்லதொரு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது . தமிழ்நாட்டின் எதிர்ப்பின் காரணமாக இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற முடிவினை எடுத்திருக்கிறார் .
சிறிலங்கா தொடர்பான சர்வதேச நிலைப்பாட்டில் தென் ஆசிய பிராந்திய வல்லரசாக கருதப்படும் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியம் வாய்ந்ததொன்றாகும் . ஏனைய நாடுகளின் சிறிலங்கா தொடர்பான நிலைப் பாட்டுகளில் இந்தியாவின் அரசியல் நகர்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன .
சிறிலங்கா மனித உரிமைகள் மீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்குமுகமாக மொரிசியஸ் பிரதமரின் பொதுநலவாய மாநாட்டின் புறக்கணிப்பு சிறிலங்கா சர்வதேச அரங்கில் தனிமைப் படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றது .
சிறிலங்காவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்பதில்லை என கனடாவும் மொரிசியஸ்சும் எடுத்த முடிவுகளுக்கும் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வதில்லை என்ற முடிவுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன .
கனடா கொள்கை நிலைப்பாடு சார்ந்து இந்த முடிவினை எடுத்திருக்கிறது . இந்தியா தமிழ்நாட்டின் அழுத்தம் காரணமாக தமிழ்நாட்டு மக்களைச் சாந்தப்படுத்த இந்த முடிவினை எடுத்துள்ளது .
ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சர் தலைமையில் இந்தியாவின் உயர்மட்டக்குழு மாநாட்டில் பங்கு பற்றும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது . இது தமிழ்நாட்டின் கோபத்தைக் கிளறி விட்டிருக்கிறது .
முழுமையான புறக்கணிப்பை மீண்டும் வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபை மீண்டுமொரு தீர்மானத்தை நவம்பர் 12,2013 அன்று நிறைவேற்றியிருக்கிறது . இத் தீர்மானத்தை நாம் வரவேற்பதுடன் இவ் விடயத்தில் அக்கறையுடன் செயற்படும் தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா , உள்ளிட்ட அனைத்துத் தமிழக அரசியல் தலைவர்களையும் தமிழக மாணவர்களையும் மக்களையும் நாம் நன்றியுடன் நெஞ்சில் இருத்திக் கொள்கிறோம் .
ஒடுக்குமுறை அரசொன்றைத் தனிமைப்படுத்துவதா அல்லது அதனுடன் இணைந்து செயற்பட்டு மாற்றத்தை ஏற்படுத்தவதா என்பது நாடுகள் இடையிலான வெளியுறவுக் கொள்கையில் நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு வாதம் ஆகும் . அரசுகளுக்கிடையில் உள்ள உறவுகளாலும் நலன்கள் குறித்த சமன்பாட்டினாலுமே இது பெரிதும் தீர்மானிக்கப்படுகிறது .
முன்னர் தென்ஆபிரிக்கா வெள்ளை நிறவெறி அரசுக்கு எதிராகத் தனிமைப்படுத்துவதனை விட இணைந்து செயற்பட்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே பல நாடுகளும் விரும்பின . ஆனால் இவ் அணுகுமுறை வெற்றியளிக்காது போகவே உலக நாடுகள் பல்வேறு தடைகளைக் கொண்டு வந்து தென்ஆபிரிக்கா வெள்ளை நிறவெறி அரசினை தனிமைப்படுத்திய பின்னரே வெள்ளை நிறவெறி அரசு பணிந்து அங்கு மாற்றம் வந்தடைந்தது .
இன்றும் சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட்டு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று பல நாடுகள் கருதுகின்றன . இந்தியாவும் இந்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது . இதனால்தான் சிறிலங்காவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்பதில்லை என்ற முடிவு மிகவும் தயங்கித் தயங்கி எடுக்கப்பட்டிருக்கிறது .
இதேவேளை இந்திய உயர்மட்டக்குழு பங்குபற்றும் என்பதுவும் கூடவே முடிவாயிருக்கிறது . ஆனால் தென்னாபிரிக்காவில் எவ்வாறு இந்த அணுகுமுறை தோல்வியடைந்ததோ அதேபோல சிறிலங்காவோடும் இந்த அணுகுமுறை தோல்வியினைத்தான் தழுவும் . இதனைத் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு 08.6.2011 அன்று தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்கா மீது பொருளாதாரத்தடையைக் கோரியிருந்தார் .
சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறும் இத் தருணத்தில் இணைந்து செயற்படும் அணுகுமுறையைக் கைவிட்டு சிறிலங்காவைத் தனிமைப்படுத்தும் வகையில் பல்வேறு தடைகளை சிறிலங்கா மீது கொண்டு வருமாறு நாம் உலகத் தலைவர்களைக் கோருகிறோம் .
பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறும் காலகட்டத்தில் தமிழீழத் தாயகத்தில் சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டங்கள் நடைபெறுகின்றன . இவற்றுக்கு ஆதரவாகவும் சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறுவதைக் கண்டித்தும் புலத்திலும் பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன . மேலும் போராட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன . தமிழகத்திலும் போராட்டங்கள் விரிவடைந்து வருகின்றன .
சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறும் காலத்தில் உலகத் தலவர்களினதும் ஊடகங்களினதும் கவனம் அங்கு குவிந்திருக்கும் இந்த வேளையில் ஈழத் தாயகத்திலும் புலத்திலும் தமிழகத்திலும் ஏனைய உலக நாடுகளிலும் தமிழ் மக்கள் தமது போராட்டங்களை மேலும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என வேண்டுவதோடு இவ் அனைத்துப் போராட்டங்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவை பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்திக் கொள்கிறது .
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி . உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக