சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

15 டிசம்பர், 2013

குண்டு வெடிக்க இருக்கும் இடத்துக்கு யாராவது கர்ப்பிணி மனைவியை அனுப்பி வைப்பார்களா? முருகன்

ராஜீவ் காந்தி வந்த விமானம் தாமதம் ஆகிவிட்டது என்ற விவரத்தை சிவராஜனுக்கு சொன்னது யார்?

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யவில்லை. திருத்தம் செய்தோம்" என்று வழக்கு விசாரணை அதிகாரி தியாகராஜன் சொன்ன நிலையில்... வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரது
வாக்குமூலங்களும் திருத்தப்பட்டுள்ளதன என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7-ம் திகதி வேலூர் சிறையில் முருகனை சந்தித்திருக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. முருகன் சொன்னதாக எஸ்.துரைசாமி சில தகவல்களை முதலில் சொன்னார். "பேரறிவாளன் வாக்குமூலம் திருத்தப்பட்டது போல நளினியின் வாக்குமூலமும் திருத்தப்பட்டது. ராஜீவ் காந்தியை ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் கொல்ல இருப்பது எனக்குத் தெரியும் என்று நளினி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக பொலிஸார் பதிவு செய்துள்ளது முற்றிலும் தவறானது.
  
"குண்டு வெடிப்பு நடந்தபோது நான் அங்கேதான் இருந்தேன் என்றும் நளினி வாக்குமூலத்தில் சொல்லவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்றால், நான் தனியே போகிறேன்; அக்கா நளினி வர வேண்டாம் என்று தனு கூறிவிட்டுச் சென்றுள்ளார். நளினியின் கையைப் பிடித்து சுபாவிடம் ஒப்படைத்தார். அந்த இடத்தைவிட்டு நளினி வெளியேறிய அரை மணி நேரத்துக்குப் பின்னர்தான் குண்டு வெடித்தது. இதைத்தான் வாக்குமூலத்தில் நளினி சொன்னார்.
பொட்டு அம்மான் கட்டளைப்படி சிவராசனுக்கு சிறுசிறு உதவிகளை நான் செய்து கொடுத்தேன். ஆனால், சிவராசனின் நோக்கம் ராஜீவ் காந்தியைக் கொல்வதுதான் என்று எனக்கு முன்பே தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் கர்ப்பிணியான எனது மனைவி நளினியை சிவராசனுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்க மாட்டேன். குண்டு வெடிக்க இருக்கும் இடத்துக்கு யாராவது கர்ப்பிணி மனைவியை அனுப்பி வைப்பார்களா? வி.பி.சிங் கூட்டத்துக்கு அவர்கள் சென்றபோது எதுவும் நடக்கவில்லை. அதுபோலத்தான் ராஜீவ் காந்தி கூட்டத்துக்கும் செல்வதாக நினைத்தேன். ராஜீவ் காந்தியை கொல்ல இருப்பது நளினிக்கு தெரியாது. இதையெல்லாம் ஒப்புதல் வாக்குமூலத்தில் நளினி சொன்னார்.
ஆனால், விசாரணை அதிகாரிகள், "ராஜீவ் காந்தியை படுகொலை செய்வதன் மூலம் தனு சரித்திரம் படைக்கப் போகிறாள் என்று சுபா தன்னிடம் சொன்னதாக நளினி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்று எழுதிவிட்டனர். இப்படிக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களை, விசாரணை அதிகாரிகள் வழக்குக்கு வலு சேர்க்கும் வகையில் ஆங்காங்கு அவர்கள் இஷ்டப்படி எழுதிக்கொண்டனர். இதெல்லாம் இப்போதுதான் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகிறது" என்று முருகன் தன்னிடம் சொன்னதாக வழக்கறிஞர் எஸ்.துரைசாமி சொல்கிறார்.
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் எஸ்.துரைசாமி,
"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ. கண்டுபிடிக்க முடியாத மர்ம முடிச்சுகள் பல இருக்கின்றன என்று ஆரம்ப காலத்தில் இருந்து நான் சொல்லி வருகிறேன். அதுபற்றி சி.பி.ஐ-க்கும் காங்கிரஸ் அரசுக்கும் எந்த அக்கறையும் இல்லை. சில அப்பாவிகளை தூக்கில் போட்டுவிட்டு வழக்கை முடித்துவிடத்தான் அவர்கள் துடிக்கிறார்கள்.
சி.பி.ஐ. கண்டுபிடிக்கத் தவறிய மிக முக்கியமான விஷயம், ராஜீவ் காந்தி வந்த விமானம் தாமதம் ஆகிவிட்டது என்ற விவரத்தை சிவராஜனுக்கு சொன்னது யார்? விசாகப்பட்டினத்தில் இருந்து மாலை 5.30-க்கு கிளம்ப வேண்டிய விமானத்தில் ராஜீவ் வருவதாக திட்டமிடப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரம் தாமதமாக 6.30-க்குத்தான் அந்த விமானம் அங்கிருந்து கிளம்பியது. சிவராஜன் ஒரு துண்டு சீட்டில் "சென்னை புறப்பாடு 5.30 மணி என்று முதலில் எழுதி, அதை
 அழித்துவிட்டு 6.30 என்று எழுதி இருந்தார். இதனை சி.பி.ஐ. கைப்பற்றி ஆதாரமாகக் காட்டியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் ராஜீவ் காந்தி விமானம் தாமதமாகப் புறப்படுகிறது என்ற தகவல் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வி.ஐ.பி-க்கள், போலீஸாருக்குக்கூடத் தெரியவில்லை. இப்போது உள்ளதுபோல 1991-ம் ஆண்டில் செல்போன், இன்டர்நெட் வசதிகள் எல்லாம் கிடையாது. இருப்பினும் சிவராசனுக்கு ராஜீவ் காந்தியின் விமானம் தாமதமாகப் புறப்படுகிறது என்ற தகவல் முன்கூட்டியே எப்படி கிடைத்தது... இந்தத் தகவலை கொடுத்தது யார்? என்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்கவே இல்லை. கண்டுபிடிக்க முயற்சிக்கவும் இல்லை.
'பெப்ரவரியில் சிவராசனிடம் 9 வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்தேன் என்று மட்டும்தான் பேரறிவாளன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால், விசாரணை அதிகாரி தியாகராஜன், 'அந்த பேட்டரியை பயன்படுத்தித்தான் மே 21-ம் தேதி ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்திய குண்டை வெடிக்கச் செய்தனர் என்று பேரறிவாளன் கூறியதாகவே ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ளே புகுத்திவிட்டனர். இப்படி சி.பி.ஐ. தன்னுடைய கற்பனைக்கு ஏற்றமாதிரி வாக்குமூலங்களைத் திரித்து எழுதி உள்ளது. அதை மையப்படுத்தி, 'ராஜீவ் காந்தி கொலை - மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகம் எழுதியுள்ளேன்" என்று சொன்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக